வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளதால் வாரிசு படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமன் இசையமைத்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இதனிடையே கடந்த நவம்பர் 5 ஆம் தேதி வாரிசு படத்தில் இருந்து “ரஞ்சிதமே” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. விவேக் வரிகளில் நடிகர் விஜய் , மானஸி பாடியுள்ள இப்பாடல் பல பாடல்களின் காப்பி, மியூசிக் காப்பி என ஏகப்பட்ட சர்ச்சை எழுந்தது. அதேசமயம் இரட்டை அர்த்தத்தில் பாடல் வரிகள் எழுதப்பட்டதாகவும் கூறப்பட்டது.  யூட்யூப்பில் 46 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளை பெற்றுள்ள ரஞ்சிதமே பாடல் மியூசிக் பிரிவில் ட்ரெண்டிங் நம்பர் 1-ல் உள்ளது.






மேலும் வீடியோவில் இடம் பெற்ற டான்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் முதல்முறையாக ஜோடி சேர்ந்த விஜய் - ராஷ்மிகா ஜோடியும் சூப்பராக உள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இப்பாடல் தியேட்டரில் வரும் போது  சீட்ல யாரும் உட்கார மாட்டிங்க. நடிகர் விஜய் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் என தமன்  தெரிவித்த நிலையில் முன்னதாக இப்பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டரும் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருந்தார். 






இதனிடையே தியேட்டர்களில் தற்போது பிற படங்களின் இடைவேளையின் போது ரஞ்சிதமே பாடல் ஒளிபரப்பப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது. மேலும் ரஞ்சிதமே பாடலின் நடன அசைவுகளை நீங்களும் ஆடிப்பாருங்கள் என்ற சவாலை பலரும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.