நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 


மாநகரம், கைதி,மாஸ்டர் ஆகிய படங்களை தொடர்ந்து இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் இணைந்து படம் பண்ணப் போகிறார் என்ற தகவல் வெளியானபோது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கமலின் மிகப்பெரிய ரசிகரான லோகேஷ் தன்னுடைய முந்தைய படங்களில் அவர் நடித்த கேரக்டரை அடிப்படையாக கொண்டு கதாபாத்திரங்களின் தோற்றத்தை உருவாக்கியிருப்பார். இப்படித்தான் “விக்ரம்” படம் தொடங்கியது. 






படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது. கத்தி, துப்பாக்கி என சகட்டுமேனிக்கு ஆயுதங்கள் மற்றும் எதிரிகளுக்கு நடுவே பிரியாணி சாப்பிட தயாராகும் கமல்ஹாசன் “ஆரம்பிகலாங்களா?” என பேசிய அந்த ஒரு வார்த்தையும், அவர் நடித்த பழைய விக்ரம் படத்தின் பிஜிஎம் மியூசிக்கும் ஷூட்டிங் போகும் முன்பே மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டியது. மேலும் விக்ரம் படத்தில் ஃபஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், விஜய் சேதுபதி, காயத்ரி, ஷிவானி நாராயணன், பிக்பாஸ் மாயா, ஸ்வதிஸ்டா, மகேஸ்வரி, அருள் தாஸ், ரமேஷ் திலக், சந்தான பாரதி, மாரிமுத்து என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்தார். 


போதைப் பொருள் கடத்தல் பற்றியும், போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உண்டாக்க வேண்டும் என நினைக்கும் ஹீரோவை மையப்படுத்தியும் விக்ரம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் முதல் பாதியில் சில காட்சிகள் மட்டுமே கமல்ஹாசன் வந்திருப்பார். இரண்டாம் பாதி முழுக்க கெத்து காட்டியிருப்பார். இடைவேளை காட்சியும், நாயகம் மீண்டும் வர்றான் பாடலும் மிகப்பெரிய பலமாக அமைந்தது. ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை சொந்தமாக தயாரித்த நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது. 


லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படத்தில் விக்ரம் படமும் இணைந்தது. முந்தைய கைதி படத்தோடு இப்படம் இணைக்கப்பட்டது. அதேசமயம் கேமியோ ரோலில் ரோலக்ஸ் என்னும் கேரக்டரில் சூர்யா நடித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இப்படி ஏகப்பட்ட விஷயங்களை லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து பண்ணியதால் விக்ரம் படம் வசூலில் ரூ.400 கோடி அள்ளியது. இந்நிலையில் விக்ரம் படம் ரிலீசாகி இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 






இதனை குறிப்பிடும் விதமாக சமூக வலைத்தளங்களில் ராஜ்கமல் நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “விக்ரம் படம் வெளியாகி இரண்டு அற்புதமான ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடுகிறோம் ! சினிமாவில் புதிய தரத்தை ஏற்படுத்திய படம். இந்த மறக்க முடியாத பயணத்திற்காக குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.