இந்திய சினிமாவின் பெருமைமிகு படங்களில் ஒன்றாக வெளியான பாகுபலி படத்தின் 2 பாகம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் ஆகிறது. 


கடந்த 2015 ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் வெளியானது. அதற்கு முன்னால் ரசிகர்கள் பெரும்பாலானோர்க்கு ராஜமௌலி என்றால் ஈ-யை வைத்து படம் எடுத்தவர் (நான் ஈ) தானே என்பது மட்டுமே தெரியும். அந்த எதிர்பார்ப்புடன் தான் பாகுபலி படத்தின் முதல் பாகத்திற்கும் சென்றனர். 


ஆனால் வெளியே வரும்போது எதோ பிரமாண்டத்தைப் பார்த்த மாதிரி அப்படத்தின் மேக்கிங்கில் ஆச்சரியப்பட்டு போனார்கள். குறிப்பாக “கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கிட்டதட்ட 2 ஆண்டுகளாக இந்த கேள்வி ரசிகர்களை துளைத்தெடுத்தது. இவ்வளவு ஏன்? #WhyKattappaKilledBaahubali என்ற ஹேஸ்டேக் கூட ட்ரெண்ட் ஆனது. அப்படியான நிலையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி பாகுபலி-2 வெளியானது. இன்றோடு அப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


மறக்க முடியாத கேரக்டர்கள் 


அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலியாக இரு வேடங்களில் பிரபாஸ், தேவசேனாவாக அனுஷ்கா, அவந்திகாவாக தமன்னா, பல்வாள்தேவனாக ராணா டகுபதி, ராஜமாதா சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன், கட்டப்பாவாக சத்யராஜ் என அனைவரும் மிரட்டியிருந்தனர். இந்த படத்தில் நடித்தவர்கள் எங்கு சென்றாலும் “பாகுபலி..பாகுபலி” என சொல்லி ஆர்ப்பரித்தனர். குறிப்பாக அனைவருக்குமே சமமான அளவில் கதையில் பங்களிப்பை ராஜமௌலி அளித்திருந்தார். 


கட்டப்பாவும்... பாகுபலியும்


முதல் பாகத்தில் மகிழ்மதியின் அரசன் அமரேந்திர பாகுபலி தான் தன்னுடைய அப்பா என மகேந்திர பாகுபலிக்கு தெரிய வரும். அவர் தன்னால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை கட்டப்பா தெரிவிக்க ஏன் கொன்றார் என்ற கேள்வியோடு முதல் பாகம் முடிவு பெறும். இரண்டாம் பாகத்தில்  மகிழ்மதியின் அரசனாகும் வாய்ப்பானது அண்ணன் பல்வாள்தேவனுக்குப் பதிலாக தம்பி அமரேந்திர பாகுபலிக்குத் கொடுக்க முடிவெடுக்கிறார் ராஜமாதா சிவகாமி.


ஆனால் அரசப் பதவியைக் கைப்பற்ற பல்வாள்தேவனும், அப்பாவும் நடத்தும் சூழ்ச்சியில் மகிழ்மதியின் நிம்மதி காவு கொடுக்கப்படுகிறது. இதில் பல்வாள்தேவனின் சூழ்ச்சியால் சிவகாமிதேவி ஆணைக்கிணங்க கட்டப்பாவால் பாகுபலி கொல்லப்படுகிறார். இரண்டாம் பாகத்தில் கட்டப்பா கொன்றதற்கான காரணமும், சூழ்ச்சியால் சிறைபிடிக்கப்பட்ட அம்மாவையும் அரசவையையும் மகேந்திர பாகுபலி எப்படி மீட்கிறான் என்பதே கதையாக அமைக்கப்பட்டிருந்தது.


இந்திய சினிமாவின் மணிமகுடம் 


ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாள கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வசூலில் ரூ.1000 கோடி வரை வசூல் செய்த இப்படம் இந்திய சினிமாவின் மணிமகுடம் தான். பழக்கப்பட்ட கதை.. ஆனால் கிராபிக்ஸ் காட்சியால் மிரட்டியிருந்தது பாகுபலி படம். இந்த படத்திற்கு பின்னால் பலரும் கிராபிக்ஸ் காட்சிகளில் மிரட்டும் அளவுக்கு படம் எடுக்க முயற்சித்தார்கள் என்பது நிதர்சனம். ஒட்டுமொத்தமாக பாகுபலியின் இரண்டு பாகங்களும் கொடுத்தது ஒரு பரவசமான அனுபவம்..!