ஜப்பானிய அனிமேஷ் திரைப்படங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. குறிப்பாக ஓடிடி தளங்களின் வருகைக்குப் பின் இந்தியாவில் அனிமேஷ் படங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமாகியுள்ளன. குறிப்பாக 'மாங்கா காமிக்ஸ்' வெளியிடும் கதைகளின் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களுக்கு 2k கிட்ஸ் மத்தியில் பெரும் ஈர்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் Demon Slayer Infinity Castle அனிமேஷன் திரைப்படம் இன்று செப்டம்பர் 12 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
20 கோடி வசூல்
ஹருவோ சோடோஸாகி இயக்கியுள்ள Demon Slayer Infinity Castle திரைப்படம் இந்தியாவில் இன்று செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தின் முன்பதிவுகள் தொடங்கிய நாள் முதல் திரையரங்குகளை நோக்கி அனிமே பட ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள். இந்திய படங்கள் தவிர்த்து பிற மொழி படங்களைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்பதிவுகளில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது இப்படம். சமீபத்தில் வெளியான த கான்ஜூரிங் படத்தை விட இப்படத்திற்கு அதிக வரவேற்பை கொடுத்துள்ளார்கள் ரசிகர்கள். புக் மை ஷோ செயலியில் மட்டும் இப்படத்திற்கு 5 லட்சம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் படத்திற்கு அதிகாலை 5 மணி முதல் சிறப்பு காட்சிகளும் திரையிடப்படுகின்றன. சென்சார் வாரியம் இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் 1700 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. முதல் நாளில் மட்டும் முன்பதிவுகளில் ரூ 18 கோடி இப்படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன். இப்படத்தின் வெற்றி மேலும் பல்வேறு ஜப்பானிய அனிமேஷ் படங்களுக்கு வழிவகுக்கும். மேலும் இந்தியா ஜப்பானிய படங்களுக்கு மிகப்பெரிய சந்தையாக உருவாகும் என சினிமா வல்லுநர்கள் கணித்துள்ளார்கள்.
சென்னையில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ரோகிணி திரையரங்கில் இதுவரை 8000 டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாக திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார். சென்னை வெற்றி திரையரங்கு இப்படத்திற்கு என தனியாக ப்ளெக்ஸ் வைத்து ரசிகர்களை வரவேற்த்துள்ளது.