நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனம் செய்தவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

Continues below advertisement

பராசக்தி படம்

சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ளது “பராசக்தி”. ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன், குரு சோமசுந்தரம், பைசல் ஜோசப் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தியேட்டர் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. பராசக்தி படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இது அவரின் 100வது படமாகும்.

பராசக்தி படம் முதலில் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல தரப்பினரும் வேண்டுகோள் விடுத்ததால் வசூல் பாதிக்கப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் மாற்றப்பட்டது. முதல் நாள் வரை சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி நீடித்த நிலையில், 25 சீன்கள் மாற்றம் செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. 

Continues below advertisement

தமிழ், தெலுங்கில் வெளியாகியுள்ள பராசக்தி படம் முதல் நாளில் முதல் காட்சி பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் ஆகாதது பெரும் அதிர்ச்சி அளித்தது. இப்படம் முதல் நாளில் ஒட்டுமொத்தமாக ரூ.27 கோடிக்கும் மேல் வசூலித்ததாக டான் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இந்த நிலையில் பராசக்தி படம் தொடர்பாக பாசிட்டிவ், நெகட்டிவ் என விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது. 1965 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை அடிப்படையாக கொண்ட பராசக்தி படத்தில் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி ஆகிய கேரக்டர்கள் காட்டப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் இலவச டிக்கெட்டுகளும் விநியோகம் செய்யப்பட்டது. 

அதேசமயம் பராசக்தி படம் பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவாக கருத்துகளை தெரிவித்தால் அவர்களை திமுக அனுதாபிகள் என்றும், நடிகர் விஜய்க்கு எதிரானவர்கள் என்றும் பலரும் விமர்சிக்கின்றனர். அதேசமயம் படம் நன்றாக இல்லை என்றால் விஜய் ரசிகர்கள் என்றும், ஏதேனும் ஒரு எதிர்க்கட்சி பிரமுகராகவும் சித்தரிக்கப்படுவதாக சிலர் வேதனை தெரிவித்துள்ளனர். ரூ.200 கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் நாங்கள் அந்த படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா என சொல்லக்கூட உரிமை இல்லையா என பாதிக்கப்பட்டவர்கள் குமுறி வருகின்றனர்.