பழம்பெரும் சினிமா தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


கடந்த 1977 ஆம் ஆண்டு இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி, காந்திமதி உள்ளிட்ட பலரும் நடித்த படம் “16 வயதினிலே”. இளையராஜா இசையமைத்த இந்த படத்தின் மூலம் இயக்குநராக பாரதிராஜா அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தை அம்மன் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்தவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சில படங்களை தயாரித்தார். 


கன்னிப்பருவத்திலே, கிழக்கே போகும் ரயில், பொண்ணு புடிச்சிருக்கு என படங்களை தயாரித்த ராஜ் கண்ணு கடைசியாக கமல் நடித்த மகாநதி படத்தை தயாரித்திருந்தார். 77 வயதான அவர் தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ராஜ்கண்ணு கடந்த மே மாதம் வீட்டில் குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. 


அப்போது தொடர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவதிப்பட்ட நிலையில், நடிகர் ராஜேஷ், நடிகை ராதிகா இருவரும் உதவியதாக ராஜ்கண்ணு மகள் பாமா தெரிவித்திருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மரணமடைந்து விட்டதாக இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “"16 வயதினிலே"திரைப்படத்தின் வாயிலாக  என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற
என்  முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும்
என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்’ என தெரிவித்துள்ளார். 


எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.