இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஒரு நடிகராகவும் வெற்றி பெற்றுள்ள விஜய் ஆண்டனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா - அக்னி - விஜய் ஆண்டனி


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த விஜய் ஆண்டனியின் உண்மையான பெயர்  பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா. கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய அவர் சென்னைக்கு வந்து வேலை தேடிய புதிதில் தனது பெயரை அக்னி என மாற்றி சட்டப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.  திரையுலகில் இன்றளவும் விஜய் ஆண்டனி பலராலும் அக்னி என்றே அழைக்கப்படுகிறார். 


இப்படியான நிலையில் 2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி அறிமுகமானார். அப்படத்தின் இயக்குநரான  எஸ்.ஏ.சந்திரசேகரன் தான் அக்னி  என்ற பெயரை விஜய் ஆண்டனியாக மாற்றினார். 


அதற்கு முன்னதாக விளம்பரங்கள், காதலிக்க நேரமில்லை ஆகிய சீரியலுக்கான பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.  சினிமாவுக்கு அறிமுகமான பின் விஜய் ஆண்டனி என்றாலே பலருக்கும் புதுவிதமான மெட்டுக்களோடு, ஆட்டம்போட வைக்கும் பாட்டுகளை கொடுப்பவர் என்று தான் நியாபகம் வரும். அப்படி சுக்ரன் படத்திற்கு பிறகு டிஷ்யூம், நான் அவனில்லை என படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனிக்கு திருப்பு  முனையாக அமைந்தது ‘காதலில் விழுந்தேன்’ படம். 


ஆட்டம்போட வைக்கும் இசையமைப்பாளர்


இந்த படத்தில் இடம் பெற்ற அட்ரா அட்ரா நாக்குமுக்க பாடல், தோழியா என் காதலியா என்ற மெலடி பாடல் என இந்த ஆல்பம் முழுக்க தன்னுடைய திறமையை கொட்டியிருந்தார். அதன்பிறகு விஜய் ஆண்டனி புகழ் வெளிச்சம் மேலும் பரவ தொடங்கியது. விஜய் நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் படங்களுக்கு இசையமைத்தார். அவரின் ஒட்டுமொத்த படங்களிலும் அபார இசைத்திறமையை காணலாம். 


அங்காடித் தெரு,TN 07 AL 4777, நினைத்தாலே இனிக்கும், அவள் பெயர் தமிழரசி, வெடி, உத்தமபுத்திரன் என ஒவ்வொரு படங்களும் இசையில் விஜய் ஆண்டனியின் இசையை இன்றளவும் பறைசாற்றுகின்றன. 


நடிப்பு மற்றும் தயாரிப்பு


திரையுலகில் இசையமைப்பாளர்கள் நடிகராகும் காலம் வந்தது. விஜய் ஆண்டனியும் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக எண்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு பிடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன், தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை என பல படங்களில் நடித்து விட்டார்.


தற்போது தனது படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் விஜய் ஆண்டனி, விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்  மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். மேலும் பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். பாடகர், பாடலாசிரியர் என இந்த 19 ஆண்டுகளில் விஜய் ஆண்டனி பல திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இப்படியான விஜய் ஆண்டனி இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


அவர் மென்மேலும் சிறப்பான படைப்புகளை கொடுத்து, வாழ்க்கையில் ஜொலிக்க ஏபிபி நாடு சார்பில் அன்பு வாழ்த்துகள்..!