தெலுங்கு சினிமாவில் 33 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் மணிசர்மா இன்று 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்தியில் அறிமுகம்
1992 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ராம்கோபால் வர்மா இயக்கிய 'ராத்ரி' படத்தின் மூலம் சினிமா துறைக்குள் எண்ட்ரீ கொடுத்தார் மணி சர்மா. அடுத்ததாக அவர் இயக்கிய அந்தம் படத்துக்கும் இசையமைத்தார். ஆனால் 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகே அவருக்கான கேரியர் தொடங்கியது என சொல்லலாம். சிரஞ்சீவி , நந்தமுரி பால கிருஷ்ணா , நாகார்ஜுனா , டக்குபதி வெங்கடேஷ் , ஜூனியர் என்டிஆர் , மகேஷ் பாபு , பவன் கல்யாண் , விஜய் , அல்லு அர்ஜுன் , பிரபாஸ் மற்றும் ராம் சரண் என தெலுங்கு சினிமாவில் மணிசர்மா பணியாற்றாத முன்னணி நடிகர்களின் படங்களே இல்லை என்னும் அளவுக்கு புகழ் பெற்றார்.
தமிழில் அறிமுகம்
2001 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்தின் தமிழில் அறிமுகமானார் மணிசர்மா. விஜய் நடித்த ஷாஜகான் படத்துக்கு இசையமைத்து புகழ்பெற்றார். அந்த படத்தின் அத்தனை பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தன. குறிப்பாக மின்னலைப் பிடித்து, மெல்லினமே பாடல்கள் விஜய்யின் திரை வாழ்வில் எவர்க்ரீன் பாடல்களாக இன்றளவும் இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து விஜய்யின் யூத், திருப்பாச்சி (ஒரு பாடல்), போக்கிரி, சுறா படங்களுக்கு இசையமைத்தார்.
அதுமட்டுமல்லாது ஏழுமலை, அரசு, கம்பீரம், மலைக்கோட்டை, காதல்னா சும்மா இல்லா, படிக்காதவன், மாப்பிள்ளை,தோரணை, மாஞ்சாவேலு என ஏகப்பட்ட ஹிட் படங்களுக்கு இசையமைத்தார். தமிழில் கடைசியாக நாரதர் என்னும் படத்துக்கு 2016 ஆம் ஆண்டு இசையமைத்திருந்தார். அதன்பிறகு தமிழ் படங்களில் மணிசர்மா பணியாற்றவில்லை.
சூப்பர்ஹிட் பாடல்கள்
அவரின் இசையில் தமிழில் “சர்க்கரை நிலவே, சந்தோஷம் சந்தோஷம், ஆல்தோட்ட பூபதி, கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு, மல்லிகை மல்லிகை பந்தலே, போக்கிரி பட பாடல்கள்” என பல பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது.
தமன் , தேவி ஸ்ரீ பிரசாத் , ஹாரிஸ் ஜெயராஜ் என பல இசையமைப்பாளர்கள் தங்களின் ஆரம்ப காலத்தில் மணிசர்மாவிடம் தான் பணியாற்றி, பின்னாளில் மிகப்பெரிய இசையமைப்பாளர்களாக உயர்ந்தார்கள். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!