வாலி


1931இல் அக்டோபர் 29 ஆம் தேதி சீனிவாச ஐயங்கார் மற்றும் பொன்னம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் கவிஞர் வாலி. வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். பப்ளிசிட்டீஸ் என்கிற விளம்பர நிறுவனத்தைத் தொடங்கிய வாலி, அது வணிக ரீதியாக பலனளிக்காததால் சோர்வடைந்தார்.


இதனைத் தொடர்ந்து நாடகக் கலையால் ஈர்க்கப்பட்ட வாலி, நாடகங்கள் இயக்கத் தொடங்கினார். தளபதி என்கிற நாடகத்தை எழுதி இயக்கினார் வாலி. இதனைத் தொடர்ந்து சினிமாவின் மேல் ஆர்வம் கொண்டு சென்னை வந்து சேந்தார்.


1959ஆம் ஆண்டு அழகர் மலைக் கள்வன் படத்தில் தனது முதல் பாடல் வரிகளை எழுதினார். அன்று புகழ்பெற்ற பாடலாசிரியராக இருந்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எம்.ஜி.ஆரால் அங்கீகரிக்கப்பட்டு பாடலாசிரியராக உருவானார் வாலி.


வாலி எழுதிய ‘நான் ஆனையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர்ந்தது. அவரது சமகாலத்தில் அனைத்து இசையமைப்பாளர்களும் கொண்டாடி வந்த கண்ணதாசனுக்கு போட்டியாக வாலி உருவெடுக்கத் தொடங்கினார். எம்.ஜி ஆர் படங்களில் நாம் கேட்கும் பெரும்பாலான கருத்துப் பாடல்கள் வாலி எழுதியவை.  கண்ணதாசனுக்கு நிகரான பாடலாசிரியராக வாலி இருந்ததற்கு காரணம் இசையில் அவருக்கு இருந்த ஆளுமை தான். 


எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் படங்களுக்கு பாடல்கள் எழுதியதில் தொடங்கி  சிவகார்த்திகேயன் , சித்தார்த் ஆகிய இன்றைய தலைமுறை நடிகர்களின் படங்களிலும் பாடல்களை எழுதியுள்ளார் வாலி. கிட்டதட்ட நான்கு தலைமுறையாக பாடல்கள் எழுதி வந்த வாலி, சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அரசியல், தத்துவம் , காதல், ஆன்மிகம் என அனைத்து தரப்புகளில் இருந்தும் இருந்து தன்னுடைய பாடல் வரிகளால் தன்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்தி இருக்கிறார் வாலி.


பாடல்கள் எழுதுவது தவிர்த்து ஓவியம் வரைவதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார் வாலி. காதல் வைரஸ், சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். கலியுகக் கண்ணன் , ஒரு கொடியில் இரு மலர்கள் தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அரசியல் ரீதியாக பெரியார், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ உள்ளிட்டவர்களுடன் நல்ல நட்பு பாராட்டியும் வந்துள்ளார்.


கடந்த 2013ஆம் ஆண்டு மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வாலி. தொடர்ந்து ஜூலை 18ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி இயற்கை எய்தினார். வாலியின் பாடல்கள் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் இன்று சிலாகிக்கப்படுகின்றன. அம்மா, பொய்க்கால் குதிரை, நிஜகோவிந்தம், பாண்டவர் பூமி என்று அவர் எழுதிய 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் ரசிகர்களால் தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டு வருகின்றன.