தமிழ் சினிமாவிம் பழம்பெரும் இயக்குநரான பாரதிராஜா மீண்டும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் சோகமடைந்துள்ளனர். 

Continues below advertisement

வயது மூப்பால் அவதிப்படும் பாரதிராஜா

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதி ராஜா தமிழ் சினிமா ரசிகர்களால் இயக்குநர் இமயம் என இன்றளவும் கொண்டாடப்படுகிறார். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையாளராக வலம் வந்த பாரதிராஜா தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்தவர். ஸ்டூடியோக்களில் எடுக்கப்பட்டு வந்த தமிழ் சினிமா படங்களை மண் சார்ந்த இடங்களில் எடுக்க தூண்டுகோலாக இருந்தவர். 

இப்படியான பாரதிராஜா 84 வயதிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன் வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார். அவருடைய மகனும், நடிகருமான மனோஜ் திடீரென மாரடைப்பால் காலமானதால் பாரதிராஜா நிலைகுலைந்து போனார். அவருடைய மனக் கவலையும், வயது மூப்பும் உடல்நிலையில் பிரச்னையை கொண்டு வந்தது. 

Continues below advertisement

மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு

மனோஜ் மறைவுக்குப் பின் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்த பாரதிராஜா சமீபத்தில் தான் சென்னை திரும்பினார். டிசம்பர் மாத இறுதியில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் பாரதிராஜா உடல்நிலை குறித்து வதந்திகள் பரவ தொடங்கியது. 

ஆனால் அவரது குடும்பத்தினர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தற்போது அவர் நலமாக இருக்கிறார் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் குடும்பத்தினர் மூலமாகவே தெரிவிக்கப்படும் எனவே எந்த வித செய்திகளையும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுக்கு இடையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குற்ற பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்ட ஆகோல் நாவல் தொடரின் மூன்றாவது பாகமான நித்திலன் வாக்குமூலம் என்ற புத்தகத்தை கபிலன் வைரமுத்து எழுதியிருந்த நிலையில் அதனை பாரதிராஜா வெளியிட்டார். இந்த நிலையில் பாரதிராஜா மீண்டும் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அவருடைய உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், சிகிச்சைக்கு பாரதிராஜா ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விரைந்து குணமாக பிரார்த்திப்பதாக திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.