தமிழ், கன்னட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை திவ்யா ஸ்பந்தனா இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


அரசியல் குடும்பம் 


1982 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த திவ்யா ஸ்பந்தனாவின் குடும்பம் அரசியல் பின்னணியை கொண்டது. தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் பெங்களூவில் மாடலிங் தொழிலை தொடர்ந்து கொண்டு கல்லூரி படிப்பை முடிந்தார். இதனையடுத்து ராம்ப் ஷோக்களில் பங்கேற்று 2001 ஆம் ஆண்டு மிஸ் கன்ட்ரி கிளப் பட்டம் வென்ற திவ்யாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. 






சூப்பர் ஸ்டார் ஜோடி


நினனகி, புனீத் ராஜ்குமார் நடித்த அப்பு ஆகிய படங்களில் நடிக்க பரீசிலிக்கப்பட்ட நிலையில், 2003 ஆம் ஆண்டு அதே கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் ஜோடியாக அபி படத்தில் அறிமுகமானார். இந்த படத்தின் தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார் தான் திவ்யாவுக்கு ரம்யா என்னும் பெயரை சூட்டினார். தொடர்ந்து எக்ஸ்க்யூஸ் மீ என்னும் கன்னட படத்தில் நடித்த அவர் அதே ஆண்டில் தெலுங்கில் அபிமன்யூ படத்தின் மூலம் அறிமுகமானார். 






’குத்து ரம்யா’ 


2004 ஆம் ஆண்டு ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் . முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமான அவர் அர்ஜூனுடன் கிரி படத்தில் நடித்தார். பின்னர் தனுஷூடன் நடித்த பொல்லாதவன் படம் இவருக்கு சிறந்த வெற்றியை கொடுத்தது. இதன் பின்னர் ஷாமுடன் தூண்டில் படத்தில் நடித்த திவ்யாவுக்கு அடுத்த மறக்க முடியாத படமாக சூர்யா நடித்து 2009ல் வெளியான வாரணம் ஆயிரம் அமைந்தது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம் புலி  என்ற படத்தில் நடித்திருந்தார். 


அரசியல் பயணம் 


2012 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸில் சேர்ந்த திவ்யா 2013 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஜெயித்து எம்.பியானார். ஆனால் அடுத்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற  தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவின் தலைவியாக திவ்யா நியமிக்கப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற  தேர்தலில்  ஏற்பட்ட தோல்வியால் அப்பதவியிலிருந்து விலகினார். 






விருதுகள் 


சினிமா துறையில் பிலிம்பேர் விருதுகள், சைமா விருது, கர்நாடக அரசின் மாநில விருது என 13 ஆம் ஆண்டுகளில் பல படங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டும், விருதுகளை வென்றும் அசத்தினார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு திவ்யா மீண்டும் உத்தரகாண்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். மீண்டும் திரையில் மின்ன தயாராகும் திவ்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!