உடற்பயிற்சி செய்யும்போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பிரபல நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கசௌதி ஜிந்தகி கே மற்றும் கட்டி பட்டி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 'குசும்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து 'வாரிஸ்', 'சூர்யபுத்ர கரண்' போன்ற நிகழ்ச்சிகளால் அவரை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது.
சில ஆண்டுகளுக்கு முன் தனது பெயரை ஆனந்த் சூர்யவன்ஷி என மாற்றிய அவர், 2001 ஆம் ஆண்டு இரா சூர்யவன்ஷியை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு பிரிந்தார். தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த மாடல் அலெசியா ராட்டை சித்தாந்த் 2வதாக திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே இன்று மதியம் வழக்கம் போல ஜிம்மில் சித்தாந்த் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 46 வயதான சித்தாந்தின் மறைவு செய்தி திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர். சமீபகாலமாக பிரபலங்கள் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.