தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ஜெயராம் நேர்காணல் ஒன்றில் தான் காதலித்து திருமணம் செய்த நிகழ்வை பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றிக் காணலாம்.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக பயணித்து வருபவர் ஜெயராம். எந்த கேரக்டர் கொடுத்தாலும் செவ்வென சிறப்பாக செய்யும் அவரின் மனைவி பார்வதி, மகன் காளிதாஸ் ஆகியோரும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான். 2கே கிட்ஸ்களுக்கும் பொன்னியின் செல்வன், காந்தாரா சாப்டர் 1 படங்கள் மூலம் ஜெயராம் நன்கு பரீட்சையமானார்.
இப்படியான நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஜெயராம், “நான் காதலித்து திருமணம் செய்துக் கொண்டேன். அது 5 வருட காதல். என்னுடைய மனைவி பார்வதி சினிமாவில் 80 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். சொல்லப்போனால் நான் நடிக்க வந்த புதிதில் அவர் முன்னணி நடிகையாக இருந்தார். பார்வதியிடம் நான் தான் முதலில் ப்ரோபோஸ் பண்ணினேன். 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி தான் காதலை சொன்னேன். அது நானும், என் மனைவியும் சேர்ந்து நடித்த இரண்டாவது படம். முதல் படத்தில் அவர் எனக்கு தங்கை கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
நான் காதலை சொன்ன இடத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23ம் தேதி எந்த வேலையும் இல்லை என்றால் குடும்பத்துடன் சென்று வருவது வழக்கம். நான் காதலை சொன்னதும் அவர் ஏற்றுக் கொண்டார். ஏதோ என்னிடம் அவருக்கும் பிடித்திருந்தது என நினைக்கிறேன்.
நாங்கள் இருவரும் 5 ஆண்டுகள் காதலித்தோம். அந்த இடைவெளியில் நாங்கள் இருவரும் சேர்த்து 10,12 படங்கள் நடித்தோம். இப்போது உள்ளது போல செல்போன், இணையம் போன்றவை கிடையாது. என்னுடைய மாமியார் ரொம்ப கண்டிப்பானவர். இன்று வரை அன்றைக்கு நீங்க எங்களை ஏமாத்திட்டீங்க என்ற டென்ஷனோடு தான் பேசுவார். கிட்டதட்ட ஒரு 4 ஆண்டுகள் இருவரும் காதலிக்கிறோம் என்பதை வெளியில் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தோம். ஏதாவது பேச வேண்டும் என்றால் கேசட்டில் பதிவு செய்து உதவி இயக்குநர்கள் வாயிலாக தான் கொடுக்க முடியும். அதேபோல் என்னுடன் நல்ல பிணைப்பில் சில இயக்குநர்கள் இருந்தார்கள்.
அவர்கள் ஷூட்டிங்கில் நாங்கள் இருவரும் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவார்கள். 5ம் ஆண்டு எல்லாருக்கும் விஷயம் தெரிந்து 1992ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டோம். நான் 30 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறேன். என்னுடைய அப்பாவுக்கு சொந்த ஊர் பாலக்காடு, அம்மாவுக்கு கும்பகோணம் ஆகும். அந்த நேரத்தில் பாலக்காடு தமிழ்நாட்டில் தான் இருந்தது. கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணையும்போது பாலக்காடு கேரளாவுடன் சேர்ந்தது” என தெரிவித்துள்ளார்.