தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திரைத்துறையில் அறிமுகமாகி இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


என்னதான் ஆந்திராவைச் சேர்ந்த தந்தைக்கும், கேரளாவைச் சேர்ந்த அம்மாவுக்கும் பிறந்திருந்தாலும் சமந்தா வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்தது. தொடர்ச்சியாக நடிப்பதற்கும் முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு சமந்தாவுக்கு வெற்றி கிட்டியது என்றே சொல்லலாம். 


ஆரம்பமே அமர்க்களம் 


இயக்குநர் கௌதம் மேனனின் சிறந்த காதல் படைப்பான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தான் சமந்தா முதல்முறையாக ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கில் இப்படம்  யே மாயா செசவே என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இதில் சமந்தா தமிழில் த்ரிஷா நடித்த ஜெஸ்ஸி கேரக்டரில் நடித்திருந்தார். அதேசமயம் தமிழில் சிம்பு எடுக்கும் படத்தின் ஹீரோயினாக சிறிய கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படம் சமந்தாவுக்கு பாராட்டுகளை குவித்தது. இதனைத் தொடர்ந்து அதர்வா அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் தான் முழுநேர ஹீரோயினாக தமிழில் சமந்தா அறிமுகம் நடந்தது. இதன்பின்னர் மாஸ்கோவின் காவிரி படத்தில் இடம்பெற்ற “கோரே கோரே” பாடம் அவருக்கு நல்ல அடையாளமாக அமைந்தது. ஆனால் இப்பாடலை பார்த்தால் இது சமந்தாவா என கேட்க கூடிய அளவுக்கு வித்தியாசமாக இருப்பார். 


முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி 


மீண்டும் கௌதம் இயக்கத்தின் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஹீரோயினார். மிகவும் சிறந்த நடிப்பை வழங்கி இளம் வயதினர் மத்தியில் தனக்கென தனியிடம் பிடுத்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் சூர்யாவுடன் அஞ்சான், விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல், விக்ரமுடன் பத்து எண்றதுகுள்ள, தனுஷூடன் தங்கமகன், சூர்யாவுடன் 24, விஷாலுடன் இரும்புக்குதிரை, சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல்  என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தமிழில் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதேசமயம் தெலுங்கில் முன்னணி நாயகியாக 30க்கும் மேற்பட்ட படங்களில் சமந்தா நடித்திருக்கிறார். 






பற்ற வைத்த பாடல் 


ஹீரோயினாக சமந்தாவின் கேரியர் ஏற்றம் கண்டிருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடியிருந்தார் சமந்தார். இப்பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. பலரும் சமந்தாவை கடுமையாக விமர்சித்தனர்.


அதேசமயம் தனிப்பட்ட வாழ்க்கையில் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா அவரை விவாகரத்து செய்தார். அதேசமயம் மயோசிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அவரின் திரைப்பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள்..!