சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போதே வெளியாகி உள்ளது. சீரிஸ் வெளியானது முதல் பலரும் ட்விட்டரில் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் பேமிலி மேன் 2 இடம்பிடித்தது. அதே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவில்லை. ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேமிலி மேன் 2 வெளியாகி உள்ளது. 






 


சென்னையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. சமந்தா ஒரு போராளி வேடத்தில் நடித்துள்ளார். விடுதலை புலிகளை இழிவுபடுத்துவதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வெப் சீரிஸ் வெளியாகி உள்ளது. மொத்தம் 7 எபிசோட்களாக வெளியாகி உள்ள இந்த சீரிசில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர்.


தற்போது வெளியாகி உள்ள சீரிஸ் குறித்து பேசியுள்ள இயக்குனர்கள் “”பேமிலி மேன் 2 சீரிஸ் வெளியாகும் நாள் இதோ வந்துவிட்டது. ஒரு படைப்பின் உச்சம் என்ன என்பதையும், பிரச்சினை என்ன என்பதையும் பற்றி பேச அதன் முடிவில் ஒவ்வொரு படைப்பாளிக்குமே ஒரு கதை இருக்கும். இதுவரை நாங்கள் உருவாக்கிய, பணியாற்றிய படைப்புகளிலேயே மிகச் சவாலான படைப்பாக ஃபேமலி மேன் இணையத் தொடரின் இரண்டாவது சீஸன் இருந்தது” என தெரிவித்தனர். 


 






முன்னதாக, பேமிலி மேன் முதல் சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸனை உருவாக்க அமேசான் ப்ரைம் முடிவெடுத்தது. அதன்படி மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது இந்த சீஸன் எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென வெளியானது. இந்த சீஸனில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரெய்லர் வந்ததும் தமிழ்நாட்டில் இருந்து இந்த சீரிசுக்கு எதிர்ப்பு எழுந்தது. 






நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் கூறும் போது “ “அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன. விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல” என்றார். 


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது “இந்த தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது. தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. எனவே, இந்த தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. அமேசான் ஓ.டி.டி. தளத்தில் இந்த தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதனால், தி பேமிலி மேன் 2 என்ற தொடர் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என எச்சரித்தார்.