தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் இன்று (ஆகஸ்ட் 29) 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


வாரிசு குடும்பத்தின் ஆக்‌ஷன் ஹீரோ 


சினிமாவில் ஒரு நடிகர் முன்னணி கதாநாயகனாக மாற வேண்டும் என்றால் அதற்கு கமர்ஷியல் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்த வேண்டும். அதனால் தான் லவ் படங்களில் ஹீரோக்கள் கொஞ்சம் ஆக்‌ஷன் கதைகளிலும் அடுத்த பரிணாமத்தை எடுக்க முயற்சிப்பார்கள். இதில் சிலருக்கு இயல்பிலேயே ஆக்‌ஷன் ஹீரோவுக்கான தோற்றம் இருக்கும். சண்டைக்காட்சிகள் மூலமாகவே அவர்கள் ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள். அதில் ஒருவர் நடிகர் விஷால். 


பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் தான் விஷால். இயக்குநராகும் கனவுகளுடன் சினிமா உலகில் நுழைந்த அவர்'வேதம்' படத்தில் நடிகர்-இயக்குநர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தார். அதன்மூலம் கிடைத்த தொடர்பு, 2004 ஆம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. காந்தி கிருஷ்ணா இயக்கிய  இப்படம்  வித்தியாசமான கதையமைப்பை கொண்ட திரில்லர் படமாக அமைந்தது. இதில், ‘காதலிக்கும் ஆசை இல்லை’ பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் விஷால்



 'சண்டக்கோழி' நாயகன் 


2வது படமாக லிங்குசாமி இயக்கிய ‘சண்டகோழி’ வெளியானது. பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இந்த படத்தில் மதுரையைச் சேர்ந்த கோபக்கார இளைஞராக விஷால் தூள் கிளப்பியிருப்பார். நட்பு, காதல், குடும்ப சென்டிமென்ட் என அனைத்து ஏரியாவிலும் ஸ்கோர் பண்ணியிருப்பார். இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளும், யுவனின் பின்னணி இசையும் இன்று பார்த்தாலும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். 'திமிரு', 'தாமிரபரணி', 'மலைக்கோட்டை' என விஷால் நடித்த ஆக்‌ஷன் படங்கள் மாஸ் ஹிட்டாயின. ஆக்‌ஷன் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். 


ரூட்டை மாற்றிய விஷால் 


சத்யம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க, சிக்ஸ் பேக் உடலமைப்பைக் கொண்டு வந்து அசத்தினார். ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய பிறகு மீண்டும் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் பிளேபாய் வேடத்தில் நடித்திருந்தார். இப்படியாக கேரியர் சென்று கொண்டிருந்த நிலையில் பாலா இயக்கிய ‘அவன் - இவன்’ படத்தில் மாற்று பார்வை கொண்டவராக நடித்து பாராட்டை அள்ளினார். 


இந்த படத்தில் முதல் பாடலில் முழுக்க முழுக்க சேலை கட்டிக்கொண்டு பெண் வேடத்தில் ஆடியிருப்பார். இதேபோல் ஒரு காட்சியில் நவரசங்களையும் முகத்தில் வெளிப்படுத்தியிருப்பார். விஷாலுக்குள் இப்படி ஒரு நடிப்பு திறமையா என ரசிகர்கள் வியந்தே போயினர். இதன் பின்னர் விஷால் ஃபிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். முதல் படமாக பாண்டிய நாடு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தனது படங்களை சொந்தமாக தயாரித்து வெளியிட்டார். ஒரு படத்தில் பாடவும் செய்தார். 


கைவிடாத ஆக்‌ஷன் 


சமர், நான் சிகப்பு மனிதன், ஆம்பள, பூஜை, மருது, துப்பறிவாளன், இரும்புத்திரை, அயோக்யா, ஆக்‌ஷன், சண்டகோழி 2, சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி என தொடர்ச்சியாக ஆக்‌ஷன் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 படங்களில் நடித்து வருகிறார். இதில் துப்பறிவாளன் 2 படம் இயக்குநராகவும் உயர்ந்துள்ளார். 



புரட்சி தளபதி விஷால் 


துருதுரு நாயகனாக வலம் வரும் விஷால் புதிய திரைப்படங்களின் திருட்டி டிவிடி விற்றவரை போலீஸில் பிடித்து கொடுத்தது,தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பதவிக்கு வந்தது என பல புரட்சிகளை செய்தார்.  நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டிடம் கட்டுவதைத் தனது வாழ்நாள் லட்சியங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளார். இந்த 19 ஆண்டுகளில் ஆக்‌ஷன் ஹீரோவாக தன்னை முன்னிறுத்து ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார் விஷால். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!