லியோ படத்தின் வசூல் ஆயிரம் கோடி ரூபாயை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தி மொழியில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


உச்சகட்ட எதிர்பார்ப்பில் “லியோ” 


மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் - அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது திரைப்படம் லியோ. படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோதே, இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அடுத்த மாதம் 19ம் தேதி திட்டமிட்டபடி லியோ படம் வெளியாக உள்ளது. அதற்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் எல்சியு படங்களில் லியோவும் இணையும் என கூறப்படுவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.


வசூலில் புதிய சாதனை படைக்குமா?


ஏற்கனவே தமிழ் திரையுலகில் விஜயின் ஒவ்வொரு புதிய படமும், அவரது முந்தைய படத்தின் வசூல் சாதனையை முறியடித்து வருகின்றன. இந்நிலையில் தான், இதுவரை இல்லாத அளவில் லியோ படத்தின் பிரீ-பிசினஸ் மட்டுமே 400 கோடி ரூபாயை கடந்துள்ளதாக திரைத்துறை வட்டாங்கள் தெரிவிக்கின்றன. இதனால், உலகம் முழுவதும் சேர்த்து லியோ திரைப்படம் 1000 கோடி ரூபாயை  வசூலித்து, தமிழ் திரையுலகில் புதிய சாதனை படைக்கு என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டு தான், தளபதி 68 படத்திற்கு விஜய் 200 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ரிலீஸுக்கு தயாரான லியோ:


தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியன் திரைப்படமாக லியோ வெளியாக உள்ளது. படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்து போஸ்டர்களும் வெளியாகி எதிர்பார்ப்புகளை எகிற செய்து வருகிறது. ஏற்கனவே விஜய் குரலில் உருவான நா ரெடி தான் பாடல் வெளியாகி, சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஹிட் அடித்துள்ளது. தொடர்ந்து, வரும் 30ம் தேதி சென்னையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது. இதனிடையே, விஜய் லியோ படத்தை முழுமையாக பார்த்துவிட்டு, இயக்குனர் லோகேஷ் கனகராஜை வாழ்த்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தியில் வந்த சர்ச்சை:


இந்நிலையில் தான், ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும் லியோ படக்குழுவினரின் திட்டத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வட இந்தியாவில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் பின்பற்றப்படும் கட்டுப்பாடு தான் அதற்கு காரணம். இந்தியில் வெளியாகும் திரைப்படங்கள் குறைந்தபட்சம் 8 வாரங்கள் திரையரங்குகளில் ஓடிய பிறகு தான், ஒடிடி தளங்களில் வெளியாக வேண்டும். அப்படி ஒப்பந்தம் கையெழுத்தானல் மட்டுமே அந்த படங்களுக்கு மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் ஒதுக்கப்படும். ஆனால், லியோ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியான, நான்கே வாரங்களில் அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பலாம் என நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் தரப்பு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஒரு பெருந்தொகையையும் பெற்றுள்ளது. இதனால், இந்தி டப்பிங்கில் லியோ படத்தை மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் வெளியிடும் வாய்ப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், லியோ படத்தின் வசூல் வட இந்தியாவில் கடுமையாக பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், ஆயிரம் கோடி ரூபாய் வசூல் எனும் இலக்கை அடைவதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.