12 ஆண்டுகளுக்குப் பின் கிராமப் பின்னணியில் ஒரு படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய். அழகான தோற்றம், கட்டுக்கோப்பான உடல் வாகு, நடிப்பு என எல்லாமே பெஸ்ட்டாக இருந்தாலும் கூட ஆரம்ப நாட்களில் அவரது திரைப்பயணம் சற்று தடுமாற்றமாகவே இருந்தது. அவ்வப்போது ஹிட் அதன்பின் அமைதி என்றே சென்று கொண்டிருந்தது அவரது திரைப் பயணம். இந்நிலையில், அஜித்துடன் அவர் நடித்த என்னை அறிந்தால் படமும் அதில் விக்டர் கதாபாத்திரமும் அருண் விஜய்க்கு நல்லதொரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் நிதானமாக பல படங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் அருண் விஜய்.
இந்த நிலையில் தான் பரபரப்பு இயக்குநர் ஹரியின் படத்தில் அருண் விஜய் ஒப்பந்தமானார். ஹிட் படங்களுக்குப் பெயர் போனவர் என்றதுடன் அருண் விஜய்யின் உறவினரும் கூட என்பதால் ஹரி அருண் விஜய் கூட்டணி சற்று எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. இந்தத் திரைப்படத்தின் பெயர் தெரிவிக்கப்படாமல் படப்பிடிப்பு நடந்தது. காரைக்குடியில் பெரும்பாலான காட்சிகள் படமாகின. இந்நிலையில், படத்திற்கு யானை என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தனது படம் குறித்து அருண் விஜய் அளித்தப் பேட்டியில், யானை என்ற தலைப்பு இந்தப் படத்துக்கு மிகவும் பொருத்தமானது. தலைப்பின் படி தான் நாயகனின் கதாபாத்திரமும் இருக்கும். யானைகள் எப்போதுமே குடும்பத்தைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தும். அப்படித்தான் படத்தின் நாயகனும் தனது குடும்பத்தைப் பாதுகாக்கிறார். ஆக்ஷன், குடும்ப சென்டிமென்ட் என்று திரைப்படம் களைகட்டும்.
12 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் பக்கா கிராமப் பின்னணி படத்தில் நடிக்கிறேன். எனக்கு எப்போதுமே கிராமத்துப் பின்னணி கதை மீது அதிக ஈர்ப்பு உண்டு. எல்லா நாயகர்களுக்கும் பெரும் வெற்றி அப்படியொரு கிராமப் பின்னணி படத்திலிருந்து தான் தொடங்கியிருக்கும். அது மட்டுமல்லாது பி மற்று சி ஆடியன்ஸையும் திருப்திப்படுத்த இப்படியான கதைக்களங்கள் அவசியம். இது ஹரி படம் என்பதால் படத்தில் நடிகர், நடிகையர் பட்டாளத்துக்கு குறைவில்லை.
இப்போதைக்கு கையில் இரண்டு படங்கள் உள்ளன. அவை முடிந்த பின்னர் அடுத்த படங்களை ஏற்பேன் என்று கூறினார். யானை படத்தின் படப்பிடிப்பில் ஒரு சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட உள்ளன. அத்துடன் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படம் அருண் விஜய்யின் 33வது திரைப்படம் என்பதால் #AVV33 என்ற ஹேஷ்டேக்கில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.