தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளின் பட்டியல் ஏராளம். அவர்கள் மீது இருக்கும் அளவு கடந்த அன்பால் என்னென்னவோ விஷயங்களுக்கு எல்லாம் நடிகைகளின் பெயர்களை சூட்டி மகிழ்வார்கள். அதிலும் பல படி மேலே போய் சினிமா நடிகைக்கு கோயில் கட்டி கொண்டாடவேண்டும் என ரசிகர்களை தூண்டிய ஒரு எவர்கிரீன் நடிகை தான் என்றும் வருஷம் 16 ஆகவே இருக்கும் நடிகை குஷ்பூ. இந்த தனி பெருமையையும் புகழையும் பெற்ற குஷ்பூவின் 53வது பிறந்தநாள் இன்று.



என்றும் இளமை:


மும்பையில் பிறந்து வளர்ந்த இந்த குட்டி தேவதை பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கினார். ரஜினிகாந்த், பிரபு இணைந்து நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அப்படம் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும் அடுத்ததாக கார்த்திக் ஜோடியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்த 'வருஷம் 16' திரைப்படத்திற்கு பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார் குஷ்பூ.


எகிறிய மார்க்கெட் : 


அடுத்தடுத்து குஷ்பூ எடுத்து வைத்த அடி எல்லாமே வெற்றி படிதான். தொடர்ச்சியாக வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன், தாலாட்டு பாடவா, மை டியர் மார்த்தாண்டன் என தொடர் ஹிட்தான். எந்த ஹீரோவாக இருந்தாலும் குஷ்பூவுடன் கெமிஸ்ட்ரி படு சூப்பராக ஒர்க் அவுட்டாகும். 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் கமலுடன் இணைந்து ரம் பம் பம்... என டூயட் பாடிய குஷ்பூவின் லெவல் எட்டாத உயரத்திற்கு சென்று அவரின் மார்க்கெட்டை எகிற வைத்தது.



அடுத்தடுத்து ஹிட் :


பிரபு ஜோடியாக குஷ்பூ நடித்த 'சின்ன தம்பி' படத்தை யாராவது மறக்க முடியுமா என்ன? மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த இப்படத்தில் குஷ்பூவின் நடிப்பில் பெரிதும் பேசப்பட்டது. அதேபோல பிரபு - குஷ்பூ ஜோடியும் சக்கைபோடு போட்டது. கமலுடன் 'சிங்காரவேலன்' சத்யராஜுடன் 'பிரம்மன்', 'ரிக்‌ஷா மாமா', ரஜினிகாந்துடன் 'அண்ணாமலை', 'மன்னன்', 'பிரபுவுடன் ' புருஷ லட்சணம்', சரத்குமாருடன் 'நாட்டாமை', ஜெயராமுடன் 'கோலங்கள்', நெப்போலியனுடன் 'எட்டுப்பட்டி ராசா' என அனைத்துமே சூப்பர் ஹிட் படங்கள்.


இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் மிகவும் பொறுப்பான ஒரு குடும்ப தலைவியாக கவனித்து வருகிறார். அதே சமயத்தில் அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் வீரமங்கையாக குஷ்பூ திகழ்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.