தோல்வியில் துவண்ட சூர்யா..


கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக வலம் வந்த சூர்யாவின் அடுத்தப்படங்கள் தோல்வியை சந்திக்க, கோலிவுட் ரேசில் தாக்குப்பிடிக்க கட்டாயம் ஒரு வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டார் சூர்யா. 


இதனைத் தொடர்ந்து தான் கே.வி ஆனந்த் இயக்கத்தில் நடித்த  ‘காப்பான்’ வெளியானது. ஹாரிஸ் சூர்யா கூட்டணி, இன்னொரு பக்கம் மோகன் லால், ஆர்யா என பெரிய பட்டாளத்துடன் களம் இறங்கினாலும், படம் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை. தொடர் தோல்விகள், பல விமர்சனங்கள் என எதிர்கொண்ட சூர்யா கொஞ்சம் டைம் எடுத்து சுதாவோடு ‘சூரரைப்போற்று’  திரைப்படத்தில் இணைந்தார்.


 



இந்தப்படம் தொடர்பான ப்ரஸ் மீட்டில் சூர்யாவின் அப்பா சிவகுமார், “ புலி பதுங்குறது பாயுறதுக்குதான்” என சொல்ல ஒரு பக்கம் சூடேற்ற, படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, சூர்யாவின் மீது பாய்ந்த வசை சொற்கள் என எக்கச்சக்க சர்ச்சையோடு வெளியானது படம்.


படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற, அடுத்தாக வந்த ஜெய் பீம் சூர்யாவின் சரிந்த மார்க்கெட்டை மீண்டும் தூக்கிப்பிடித்திருக்கிறது. இரண்டு படங்களிலுமே, வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்த சூர்யா, அடுத்த கமர்சியல் வெற்றிக்காக, இயக்குநர் பாண்டி ராஜூடன் கை கோர்த்திருக்கிறார். படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் காட்சிகள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. 


 


பாண்டிராஜ் படம் 


ட்ரெய்லரை பார்க்கும் போது, வழக்கமான பாண்டிராஜ் படத்தில் இடம் பெறும் குடும்ப செண்டிமெண்ட், காமெடி, கிண்டல் என எல்லாம் இதிலும் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.  ஆக்‌ஷனுக்கு எப்போதுமே முக்கியத்துவதும் கொடுக்கும், பாண்டிராஜ், இது சூர்யாவின் படம் என்பதால் அதை தூக்கலாகவே தந்திருக்கிறார். ட்ரெய்லரிலேயே 3 இடங்களில் சண்டை காட்சிகள் வருகின்றன. அதிலும் அந்த செங்கல் சூளையில் வைத்தும் நடக்கும் சண்டை காட்சி நிச்சயம் திரையரங்கில் அப்லாஸை அள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.




கனமான கதாபாத்திரம் 


ஆதினியாக வரும் பிரியங்கா மோகனனுக்கு கனமான பாத்திரம் என்பது ட்ரெய்லரில் தெளிவாக தெரிகிறது. நக்கல், காதல், ரொமன்ஸ், மனைவிக்கான பொறுப்பு என நிச்சயம் படத்தில் அவர் ஸ்கோர் செய்ய நிறைய இடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இயக்குநர் பாண்டிராஜூம் அவரது ஃபெர்ப்மான்ஸை பேட்டி ஒன்றில் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 




செண்டிமெண்ட் போர்ஷனுக்கு, சரண்யா பொன்வன்னனும், சத்யராஜ், எம்.எஸ். பாஸ்கர் என பெரும் பட்டாளம் இருக்கிறது. அதனால் அவர்கள் தொடர்பான காட்சிகள் நிச்சயம் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 


டி இமானின் டச் பிஜிஎம்மில் சில இடங்களில் தெரிந்தாலும், பாடல்கள் என்னவோ பெரிதாக வசிகரிக்க வில்லை. ஒரு வேளை படத்தோடு பார்க்கும் போது பிடிக்குமோ என்னவோ.. ஆனால் பாடல்களின் விஷ்வல்ஸ் நிச்சயம் வெரைட்டியான கான்செப்ட்ஸ், டான்ஸ் என இருக்கும் எனத் தெரிகிறது. 


துப்பறிவாளன், டாக்டர் படத்தை தொடர்ந்து இந்தப்படத்திலும் வினய்க்கு வில்லன் ரோல்.. வினயின் கதாபாத்திரம் நிச்சயம் மிரட்டலாக என்று எதிர்பார்க்கலாம். 


பொள்ளாச்சி சம்பவமா?


எல்லாவற்றுக்கும் மேலாக, படத்தின் மையக்கரு பெண்கள் சந்திக்கும் பிரச்னையை பற்றி பேசுகிறது. இது பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை தகவல் வெளியான நிலையில், அதற்கு பேட்டி ஒன்றில் விளக்கம் கோடுத்திருந்த பாண்டிராஜ் அதை இல்லை என்று மறுத்திருந்தார்.




மேலும் பேசிய அவர் இது இந்தியா முழுக்க பெண்கள் சந்திக்கும் பிரச்னையை பற்றி பேசும் என்று குறிப்பிட்டு இருந்தார். ட்ரெய்லரை பார்க்கும் போது வில்லனாக வரும் வினய், பெண்களின் ஆபாச வீடியோக்களை வைத்து அவர்களை மிரட்ட, அந்தப் பெண்களை அண்ணனாக வரும் சூர்யா  எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ஒன்லைனாக இருக்கும் எனத் தெரிகிறது. அதனை பொறுப்போடு படம் இயக்கும் பாண்டிராஜ் செவ்வென செய்திருப்பார் என நம்பலாம்.


அதே போல ட்ரெய்லரில் இடம் பெற்ற,   “இந்த ஊருக்கு வாய் மட்டும்தான் இருக்கு, காது இல்ல..  “பொண்ணுங்கனாலே பலவீனம்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க.. இல்ல பலம்னு ஆக்கணும்” போன்ற வசனங்களில் பாண்டிஜின் டச் இருக்கிறது. அதனால் வசனங்களும் கவனம் பெறும் என எதிர்பார்க்கலாம். 


எல்லாவற்றுக்கும் மேலாக சன்பிக்சர்ஸ் உடன் சூர்யா கைகோர்த்த அயன் மற்றும் சிங்கம் பார்ட் 1 ப்ளாக் பஸ்டர்  லிஸ்டில் இருக்க இந்தப்படமும் அந்த லிஸ்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.