பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகரான தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானதாக வெளியான தகவலுக்கு அவரது மகளும் நடிகையுமான ஈஷா தியோல் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் மறைந்து விட்டதாக பரவிய தகவல் இந்திய திரையுலகினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்திய திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான நடிகராக திகழ்ந்த தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தி நடிகை ஹேமமாலியின் கணவரான தர்மேந்திரா தனது 89வது வயதில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவிக்க தொடங்கிய நிலையில் ஈஷா தியோல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் ஹீ - மேன்
1935ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் டிசம்பர் 8ஆம் தேதி பிறந்த நடிகர் தர்மேந்திரா, கிட்டதட்ட 60 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் மிக முக்கியமான நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். தொடர்ச்சியான வெற்றி மற்றும் வணிக ரீதியான படங்களை கொடுத்ததால் அவர் பாலிவுட்டின் ஹீ மேன் என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படக்களில் நடித்தவர் என்ற பெருமைக்கு தர்மேந்திரா தான் சொந்தக்காரர் என்பது குறிப்பிடக்க விஷயமாகும்.
சினிமா மீதான ஆசையில் பஞ்சாபில் இருந்து மும்பைக்கு சென்ற தர்மேந்திரா 1960 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ஹிங்கோரானியின் தில் பி தேரா ஹம் பி தேரே படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 1961 ஆம் ஆண்டு வெளியான ஷோலா அவுர் ஷப்னம் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களம் கண்டு வெற்றி பெற்றார். பாலிவுட்டின் மிகப்பெரிய ஹிட்டாக பார்க்கப்படும் ஷோலே படம் பலரின் ஆல்டைம் பேவரைட் படமாக இருக்கிறது. மேலும் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் பணியாற்றினார்.
சிறப்பான பங்களிப்பு
இந்தி மட்டுமல்லாது வங்கமொழி, பஞ்சாபி திரைப்படங்களிலும் தர்மேந்திரா நடித்துள்ளார். அவரின் திரையுலக பங்களிப்பை பாராட்டி 2013ம் ஆண்டு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. இவருக்கு மறைந்த பாலிவுட் நடிகர் திலீப் குமார் ஒருமுறை வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். அந்த மேடையில் பேசிய திலீப், ’எல்லா சக்திகளும் கொண்ட கடவுளை ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போதும், ஒரு குறையை முன்வைப்பேன். அது என்னை ஏன் தர்மேந்திரா போல அழகாக படைக்கவில்லை?’ என்பது தான் என கூறி நெகிழ வைத்தார்.
தர்மேந்திரா கடைசியாக இக்கிஸ் என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் வாழ்க்கை
பாஜகவில் இணைந்து பணியாற்றிய தர்மேந்திரா 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானோர் தொகுதியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.