எம். சரவணன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் "எங்கேயும் எப்போதும்". இப்படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன என்றாலும் அந்த படத்தை பற்றி நினைக்கையிலேயே நம் மனம் கனக்கிறது. 


விபத்து முன்னும் பின்னும் இருக்கும் வாழ்க்கை:


தினமும் நாம் செய்திகளில் இங்கு விபத்து ஏற்பட்டு இத்தனை பேர் பலி அங்கு அத்தனை பேர் பலி என்னும் ஒரு செய்தியாவது அன்றாடம் நாம் காதுகளில் விழ தான் செய்கிறது. அது பெரும்பாலான நமக்கு ஒரு செய்தியாகவே மட்டும் இருக்கிறது ஆனால் அதில் பயணித்து உயிரிழந்தவர்கள் அவர்களின் குடும்பத்தினர் அல்லது பலமாக அடிபட்டவர்கள் இவர்களின் நிலைமை அவர்களுக்கு மட்டுமே தெரியும். அது போன்ற ஒரு கதையை நம் கண் முன்னே படமாக்கி காட்டியது அனைவரின் மனதையும் வலிக்க செய்தது என்றாலும் நிஜத்தில் நடப்பதற்கு அருகாமையில் நம் அனைவரையும் கொண்டு சேர்த்தது என்றே சொல்ல வேண்டும். 


 



 


தமிழ் சினிமாவின் மைல்கல் :


இரண்டு வெவ்வேறு காதல் கதைகளையும் அவர்களின் பயணத்திற்கு முன்னர் பின்னர் என்றும் பயணத்தின் போதும் எனவும் மிகவும் ஸ்வாரஸ்யமாக படத்தை நகர்த்தி இருந்தார் "எங்கேயும் எப்போதும்" படத்தின் இயக்குனர் எம். சரவணன். பேருந்தில் பயணம் செய்த ஒவ்வொருவருக்கும் பின்னணியில் ஒரு வாழ்க்கை. பல வருடங்களுக்கு பிறகு குடும்பத்தை பார்க்க செல்லும் தந்தை, புது மண தம்பதி, விளையாடும் ஒரு குழந்தை, விளையாட்டு போட்டியில் பதக்கத்தை வென்ற மாணவிகள் என அந்த பேருந்து முழுவதும் பல தரப்பட்ட கதைகளை மிகவும் அழகாக படமாகியதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமா ஒரு ஆரோக்கியமான பாதையில் பயணிக்கிறது என்பதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு. 


பேருந்து முழுக்க உணர்வுகள்:


"எங்கேயும் எப்போதும்" படத்தில் நடித்த ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா மற்றுமின்றி படத்தின் ஒரு அங்கமாக இருந்த அனைவரின் நடிப்பும் பிரமாதம். முதல் முறையாக தன்னுடைய குழந்தையை ஐந்து வருடங்களுக்கு பிறகு பார்க்க செல்லும் தந்தை அந்த பயணத்தில் உயிரை இழந்த பிறகு "அப்பா எங்க பா இருக்க..." என்னும் குழந்தையின் அந்த ரிங் டோன் நம்மை அறியாமேலே கணங்களில் கண்ணீரை வரவைத்தது. இந்த படத்தில் ஒரு விபத்தை பதிவு செய்த விதம் போல வேறு எந்த ஒரு படமும் செய்ததில்லை. அறிமுக இயக்குனராக இருந்தாலும் மிகவும் சீரான ஒரு திரை கதையோடு அழுத்தமான கதாபாத்திரங்கள் மூலம் அசத்தி இருந்தார் இயக்குனர் எம். சரவணன். இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு பக்க பலமாக இருந்தது இசை மற்றும் ஒளிப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. 


"எச்சரிக்கை! இது விபத்து பகுதி" என பல இடங்களில் நான் விளம்பர பலகைகளை பார்த்து இருப்போம். ஆனால் அதற்கு பின்னர் அது சிதைந்து போன பலரின் வாழ்க்கையை குறிக்கிறது என்பதை உணர்த்தியது இப்படம்.