மார்வெல் திரைப்படங்களின் முந்தைய அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களை காட்டிலும், மிகவும் வலிமையான நபராக காட்டப்பட்டுள்ள காயா கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது.


மார்வெல்லின் எம்சியு திரையுலகம்:


பல்வேறு விதமான சூப்பர் ஹீரோக்களை கொண்டு உலகை காப்பற்றும் கதைக்களத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள திரைப்பட தயாரிப்பு  நிறுவனம் மார்வெல். கடந்த 2008ம் ஆண்டு திரைப்பட உலகில் தனது பயணத்தை தொடங்கிய அந்த நிறுவனம், இன்ஃபினிட்டி சாகா எனும் பெயரில் 20-க்கும் அதிகமான படங்களை வெளியிட்டு,  அதன் உச்சகட்டமாக கடந்த 2018ம் ஆண்டு அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை வெளியிட்டது. அதைதொடர்ந்து தற்போது மல்டிவெர்ஸ் சாகா என்ற பெயரில் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை மார்வெல் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.


சீக்ரெட் இன்வேஷியன்:


அந்த வரிசையில் தான், நிக் ஃபியூரி மற்றும் ஸ்க்ரல் கதாபாத்திரங்களை முதன்மையாக கொண்ட சீக்ரெட் இன்வேஷியன் எனும் வெப் சீரீஸ் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகி வந்தது. அதன் கடைசி எபிசோட் கடந்த புதன்கிழமை அன்று வெளியானது. அதில் இடம்பெற்ற ஸ்க்ரல் இனத்தின் முன்னாள் தலைவனான டாலோஸின் மகள் காயா தான் தற்போது மார்வெல் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளார். 


கிராவிக்கின் திட்டம்


சீக்ரெட் இன்வேஷியன் வெப் சீரிஸில் உருமாறும் திறன் கொண்ட ஸ்க்ரல் இனத்தை சேர்ந்த வில்லனான கிராவிக், முன்னாள் மற்றும் தற்போதைய அதிசக்தி வாய்ந்த அவெஞ்சர்ஸ்களான கேப்டன் மார்வெல், தோர், ஹல்க், க்ரூட், டிராக்ஸ், மாண்டிஸ், கேப்டன் அமெரிக்கா, கோர்க், கமோரா உள்ளிட்டோருடன் முக்கிய வில்லன்களான தானோஷ், கல் ஒப்சிடியன், அபாமினேஷன், ஃப்ராஸ்ட் ஜெயண்ட், கோஸ்ட் மற்றும் அவுட் ரைடர் என பலரது டிஎன்ஏக்களையும் திருட முயற்சிக்கிறார். அதன் மூலம் சக்திகளை பெற்று பூமியில் உள்ள மனிதர்களை அழித்து, இதனை ஸ்க்ரல் உலகமாக மாற்ற முற்படுகிறார்.






அதிரடியான கிளைமேக்ஸ்:


இறுதி எபிசோட்டில் வில்லனை வீழ்த்தும் திட்டத்துடன் அவெஞ்சர்ஸ்களின் டிஎன்ஏவை கிராவிக்கிடம் கொடுக்க நிக் ஃபியூரி வேடத்தில் வரும் காயா, வில்லனுடன் சேர்ந்து தானும் அனைத்து அவெஞ்சர்ஸ்களின் சக்தியையும் தன்னுள் வாங்கிக் கொள்கிறார். அதைதொடர்ந்து, கேப்டன் மார்வெல் உள்ளிட்ட அனைத்து சக்தி வாய்ந்த அவெஞ்சர்ஸ்களின் சக்தியையும் உள்வாங்கிக் கொண்ட, கிராவிக் மற்றும் காயா இடையே கடும் மோதல் நிலவுகிறது. அதன் முடிவில் கிராவிக்கை கொலை செய்கிறார் காயா. தற்போது அவர் பெற்றுள்ள சக்திகள் தான், மார்வெல் ரசிகர்கள் இடையே வரவேற்பையும், எதிர்ப்புகளையும் பெற்றுள்ளது.


எமிலியா கிளார்க்:


காயா கதாபாத்திரத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் மூலம் பிரபலமான எமிலியா கிளார்க் தான் நடித்துள்ளார். மார்வெல் நிறுவனத்தில் இணைந்தபோதே, இவர் நீண்ட காலத்திற்கான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, தான் ஒட்டுமொத்த சக்தி வாய்ந்த அவெஞ்சர்ஸ்களின் திறனையும் தன்னுள் அடக்கி மார்வெல் சினிமாடிக் யூன்வெர்ஸில் மிகவும் சக்திவாய்ந்த நபராக காயா கதாபாத்திரம் உருவெடுத்துள்ளது.


எதற்கு இத்தனை சக்திகள்?


ஏற்கனவே, மல்டிவெர்ஸ் சாகாவில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதோடு, மிகவும் வலிமையான அவெஞ்சர் ஹல்கா, தோரா என்ற விவாதித்திற்கு பதிலாக, கேப்டன் மார்வெல் தான் வலிமையான அவெஞ்சர் என கூறியிருந்தனர். ஆனால் தற்போது அவரையும் மிஞ்சும் விதமாக காயா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தண்டர்போல்ட்ஸ் படம் தான் என மார்வெல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த படத்தில் மார்வெலின் மிகவும் வலிமையான கதாபாத்திரமாங்களில் ஒன்றான செண்ட்ரி அறிமுகப்படுத்த உள்ளார். அவரை எதிர்கொள்ள ஒரு வலிமையான கதாபாத்திரம் வேண்டும் என்ற நோக்கில் தான், காயாவிற்கு இந்த சக்தி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், தொடர்ந்து மார்வெல் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் பெற தொடங்கியுள்ளது.