மஞ்சும்மல் பாய்ஸ் படம் தொடர்பான பண மோசடி வழக்கில் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சௌபின் சாஹிரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
சிதம்பரம் எஸ்.பொதுவால் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் “மஞ்சும்மல் பாய்ஸ்”. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் விழுந்த கேரளாவைச் சேர்ந்த நபரை அவரது நண்பர் உயிரை பணயம் வைத்து மீட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் சௌபின் சாஹிர், தீபக் பரம்போல், ஸ்ரீநாத் பாசி, கலித் ரஹ்மான்,கணபதி, ஜூன் பால் லால், சந்து சலிம்குமார், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன், பாலு வர்கீஸ், ஷெபின் பென்சன், ஜார்ஜ் மரியன், ராமச்சந்திரன் துரைராஜ் என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர்.
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இப்படம் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசாகி சக்கைப்போடு போட்டது. வசூலில் சுமார் 200 கோடியை தாண்டியது.ரூ.20 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் 10 மடங்கு வசூலை ஈட்டியதால் ரசிகர்களும், படக்குழுவினரும் மகிழ்ச்சியடைந்தனர். இப்படியான நிலையில் துறவூர் பகுதியை சேர்ந்த சிராஜ் என்ற நபர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்களான ஷோன் ஆண்டனி, சௌபின் ஷாஹிர், பாபு ஷாகிர் மீது புகார் கூறப்பட்டிருந்ததை அடிப்படையாக கொண்டு இவர்கள் மீது கொச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தன்னை பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.7 கோடி வாங்கிய தயாரிப்பாளர்கள், அதனுடன் திரைப்படத்தின் லாப பங்குத்தொகையையும் தருவதாக சொல்லி விட்டு தரவில்லை என சிராஜ் குற்றம் சாட்டியிருந்தார். இதனடிப்படையில் விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் பண மோசடி நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. வசூல் மூலம் ஏராளமான பணம் வந்த நிலையில் கருப்பு பணமாக வைத்துள்ளனரா என்ற பாணியில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே ஷோன் ஆண்டனியிடம் விசாரணை நடந்த நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சௌபின் ஷாஹிரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர்களை கைது செய்ய தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.