இப்படத்தின் விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இயக்குநர் பவன் சதினேனி இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஸ்ருதி ஹாசன் மற்றும் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், படத்தின் கதையும் அதன் நோக்கமும் தன்னை மிகவும் கவர்ந்ததாகத் தெரிவித்தார். நம்முடைய கனவுகளை நாமே நம்புவதுடன், அந்தக் கனவுகளை அடைய மற்றொருவரின் ஆதரவும் முக்கியம் என்றும், பெரிய கனவுகளைக் கொண்டிருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதே இப்படத்தின் முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
படத்தில் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சின்னி ஜெயந்த், இதுவரை தான் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரம் இது என்றார். பிளாஸ்மா, தொழில்நுட்பம், ஈர்ப்பு விசை தொடர்பான அறிவியல் வசனங்களைப் பேசுவதற்காக அதிகம் தயாராக வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் குடும்பத்தினரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் எடுத்துரைப்பதாகவும், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய திரைப்படமாக இருக்கும் என்றும் கூறினார்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சாத்விகா வீரவல்லி, தனக்கு முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர் அல்லு அரவிந்துக்கு நன்றி தெரிவித்தார். துல்கர் சல்மானுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும், தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறினார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், படத்தின் கதையைக் கேட்டதிலிருந்தே மிகவும் பிடித்துவிட்டதாகவும், இந்திய சினிமாவில் முக்கியமான நவீன கிளாசிக் திரைப்படமாக இது அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். குடும்ப உறவுகள் மற்றும் சுய விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை இப்படம் பேசுவதாகவும் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில், 2022ஆம் ஆண்டிலேயே இப்படத்தின் கதையைக் கேட்டதாகவும், அரை மணி நேரம் கதை கேட்டதுமே படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். ஒரு கிராமத்தில் பிறந்த சாதாரணப் பெண் காணும் கனவுகளையும், அவற்றை அடைய அவளுக்குக் கிடைக்கும் குடும்ப ஆதரவையும் இப்படம் பேசுவதாகக் குறிப்பிட்டார்.
நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், ‘சீதா ராமம்’ படத்திற்குப் பிறகு இப்படத்தின் கதையைக் கேட்டதாகவும், கதாநாயகியை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும் அதன் உள்ளடக்கம் தன்னை மிகவும் கவர்ந்ததால் நடிக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். பெண் குழந்தைகளின் கனவுகளையும், அவற்றை அடைய குடும்பத்தினர் அளிக்க வேண்டிய ஆதரவையும் இப்படம் பேசுவதாகக் கூறினார்.
நவம்பர் 20ஆம் தேதி வெளியாகும் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ திரைப்படம் குடும்ப உறவுகள் மற்றும் பெண்களின் கனவுகளை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான படைப்பாக இருக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
