நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருதை வென்றுள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. தனது தந்தையை பாராட்டு விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாசமழையைப் பொழிந்துள்ளார் அவரது மகன் நடிகர் துல்கர் சல்மான்.
நண்பகல் நேரத்து மயக்கம்
மலையாளத்தில் மாற்று சினிமா இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டாடப்பட்டு வருபவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி. அங்கமலி டைரிஸ், ஈமாயு, ஜல்லிக்கட்டு ஆகிய ப்டங்களின் மூலம் மலையாளம் தாண்டி பிற மொழிகளிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி மம்மூட்டியுடன் இணைந்த படம் ’நண்பகல் நேரத்து மயக்கம்’.
மலையாளம் - தமிழ் என இரு மொழிகளிலும் ஒருசேர உருவான இந்தப் படம் மலையாளத்தில் ஜனவரி 19ஆம் தேதியும், தமிழில் ஜனவரி 27ஆம் தேதியும் வெளியானது. மம்மூட்டியுடன் நடிகர் பூ ராம், ரம்யா பாண்டியன், உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில், மம்மூட்டியின் மாறுபட்ட நடிப்பு பாராட்டுக்களை அள்ளியது. இந்நிலையில் கேரள அரசு 2023 ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான மாநில விருதை அவருக்கு அறிவித்துள்ளது. இதனால் மம்மூட்டிக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
8ஆவது முறையாக மாநில விருது
சிறந்த நடிகருக்கான மாநில விருதை மம்மூட்டி வெல்வது இது எட்டாவது முறையாகும். தான் நடித்த அஹிம்சா என்கிறப் படத்திற்காக தனது முதல் விருதை வென்றார் மம்மூட்டி. இதனைத் தொடர்ந்து 1985, 1989, 1993, 2004 2009 என அடுத்தடுத்து எட்டு விருதுகளை குவித்துள்ளார். தனது முதல் விருதை வென்ற 42 ஆண்டுகளுக்குப் பிறகு தனது எட்டாவது விருதை வென்றுள்ளார்.
தந்தையை பாராட்டிய துல்கர் சல்மான்
மம்மூட்டி விருது வென்றது அவரது ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறதோ அதே அளவிற்கான மகிழ்ச்சியை அவரது மகனான துல்கர் சல்மானுக்கு கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். சிறந்த நடிகருக்கான விருது தனது தந்தைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான். கடந்த ஆண்டு வெளியான பீஷ்மா பருவம் படத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். தற்போது பஸூகா என்கிற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் மம்மூட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.