சிலம்பரசன்
நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் சிம்பு பிஸியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. தல் லைஃப் படத்தைத் தொடர்ந்து சிம்பு அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து எஸ்.டிஆர் 49 , எஸ்.டி.ஆர் 50 ஆகிய படங்களில் நடிக்கிறார்.
எஸ்.டி.ஆர் 49
சிம்புவின் 49 ஆவது படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படத்தின் மூலம் கவனமீர்த்தவர். கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் முதல் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் நடிகர் சந்தானம் சிம்புவுடன் இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தக் லைஃப் படத்தின் ரிலீஸை ஒட்டி ஜூன் மாதம் தொடங்கும் என சிம்பு தெரிவித்துள்ளார்.டான் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைப்பது கூடுதல் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படியான நிலையில் இப்படத்தின் மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது
எஸ்.டி.ஆர் 49 இணைந்த கயடு லோகர்
எஸ்.டி.ஆர் 49 படத்தில் டிராகன் பட புகழ் கயடு லோகர் நடிக்க இருப்பதை படத்தின் இயக்குநர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடித்து சில மாதங்கள் முன்பு வெளியான டிராகன் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார் கயடு லோகர். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்று வைரலானார். டிராகன் படத்தைத் தொடர்ந்து அவருக்கு பல திசைகளில் இருந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் எஸ்.டி.ஆர் 49 படத்தில் கயடு லோகர் நடிக்க இருப்பது படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது