தமிழகத்தைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞரான டாக்டர் எல். சுப்பிரமணியம் மேற்கத்திய இசையான வயலினை பாரம்பரியமாக மாற்றியது மற்றும் அந்த மரபை உயிர்ப்புடன் வைத்திருப்பது பற்றி ஏபிபி நிறுவனத்துடனான பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இந்திய பாரம்பரிய இசைக்கருவிகளைப் பற்றிய உலகளாவிய பார்வையை மிகச் சில இசைக்கலைஞர்களே மாற்றியுள்ளனர் என சொல்லலாம். அதில் ஒருவர் டாக்டர் எல். சுப்பிரமணியம். அந்த அளவுக்கு ஒரு திறமையான வயலின் இசைக்கலைஞர், இளம் தலைமுறையினர் பலருக்கும் முன்னோடி இசையமைப்பாளர் என பல தசாப்தங்களாக இந்திய வயலினை பாரம்பரிய எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்று சிம்பொனி அரங்குகள், ஜாஸ் விழாக்கள் மற்றும் ஐந்து கண்டங்களில் உள்ள சர்வதேச கலாச்சார நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அப்படிப்பட்ட டாக்டர் எல்.சுப்பிரமணியம், தனது பயணத்தைப் பற்றி பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில், “என்னுடைய இந்த பிரபலத்திற்கு காரணம் வெளிபுறம் என்னுடைய முகமாக இருக்கலாம். ஆனால் உட்புறம் தந்தையும் குருவுமான லட்சுமிநாராயண சுப்பிரமணியத்தின் நுட்பம், பார்வை, நம்பிக்கை தான் காரணமாகும். மேலும் இந்த நேர்காணலில் டாக்டர் சுப்பிரமணியம் தனது ஆரம்பகால நினைவுகள், இடப்பெயர்ச்சியின் அதிர்ச்சி, பாரம்பரிய பயிற்சியின் துறை, ஒரு மருத்துவராக அவரது சாத்தியமற்ற இணையான வாழ்க்கை மற்றும் லட்சுமிநாராயணா உலகளாவிய இசை விழாவின் பிறப்பு பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சர்வதேச இசை விழாக்களில் ஒன்றான லட்சுமிநாராயணா உலகளாவிய இசை விழா தற்போது 35 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என தெரிவித்த சுப்பிரமணியம், தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
ஆறு வயது குழந்தையாக ஆரம்பம்
அதாவது, என்னுடைய முதல் பொது நிகழ்ச்சி இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்றது. அப்போது எனக்கு ஆறு வயது தான் ஆகியிருந்தது. அதனைப் பற்றி பேசிய அவர், நான் நிகழ்ச்சி நடத்துவதை ஏற்பாட்டாளர்கள் விரும்பவில்லை. காரணம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய ஒரு பெரிய விழா அது என்பதால் அதனை ஒரு குழந்தை அழிக்கக்கூடும் என அவர்கள் நினைத்தனர்.
ஆனால் எனது தந்தை லட்சுமிநாராயண சுப்பிரமணியம் இந்நிகழ்ச்சியை நடத்த உறுதியாக இருந்தார். எனது மகன் தனிப்பாடலை இசைப்பான் என கூறி வயலினை கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.
அதேசமயம் நான் ஏற்பாட்டாளர்களைப் பார்த்தும், அந்த நிகழ்வில் தோல்வியடைவேன் என்றும் பயந்தேன். வீட்டிற்கு திரும்ப செல்லலாம் எனவும் நினைத்தேன் என்று சிரித்துக்கொண்டே கூறும் எல்.சுப்பிரமணியம், எனக்கு இன்றும் நினைவில் இருப்பது என்னவென்று கேட்டால் அங்கிருப்பவர்கள், கடவுள் குழந்தை மூலம் வருகை புரிந்தார் என கூறியதும், இடிச்சத்தம் போல கேட்ட கைதட்டல்களும் தான் என தெரிவித்தார்.
அது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது, நம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் அச்சமின்மை ஆகியவை கலந்த வாழ்க்கைக்கான பாதையாக அமைந்தது.
இடப்பெயர்வு, போராட்டம்
1958 ஆம் ஆண்டு இந்திய எதிர்ப்பு கலவரத்தின் போது இலங்கையில் எங்களின் குடும்பம் சிக்கிக் கொண்டது. ஒரே இரவில் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், என்னுடைய தந்தை உள்ளிட்டவர்கள் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குத் திரும்பினர். என் தந்தை எல்லாவற்றையும் இழந்தார். மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து என் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரும் தொடங்கினார்கள். அது மறுகண்டுபிடிப்பு பாதை என சொல்லலாம் என்று டாக்டர் எல். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
என் தந்தை, மேற்கத்திய பாரம்பரிய பாடகர்களுக்கு நிகரான மரியாதையை பெறும் அளவுக்கு ஒரு தனி இசைக்கருவியாக வயலினை மாற்றினார். அந்த நேரத்தில் அது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. இசை அரங்கத்தில் வயலின் ஒரு முக்கிய இசைக்கருவியாகவே பார்க்கப்பட்டது. உலக அரங்கில் வயலின் தனித்து நிற்கும் வகையில் என் தந்தை அந்த இசைக்கருவியைக் கொண்டு சேர்த்தார். இந்த நிகழ்வு பாலக்காட்டு மணி ஐயர் போன்ற பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் மூலம் இந்திய வயலினுக்கு ஒரு புதிய சகாப்தம் உருவானது.
இதற்கிடையில் நான் மருத்துவம் மற்றும் இசை என இரண்டு துறைகளையும் தேர்வு செய்தேன். அப்போது என் குடும்பம் நிதி ரீதியாக சிரமப்பட்ட நிலையில் ஜெர்மனியில் இசை படிக்க உதவித்தொகை கிடைத்த போதிலும், என்னுடைய தாயார் மருத்துவம் தான் படிக்க அறிவுறுத்தினார்.
அது என் வாழ்க்கையின் சிறந்த ஆலோசனை என நான் நினைக்கிறேன் என தெரிவித்த எல்.சுப்பிரமணியம், இந்திய பாரம்பரிய இசையை மேற்கத்திய இசைக்குழுவுடன் இணைந்து செயல்படுத்தியபோது உலகளாவிய அளவில் அதன் புகழ் பரவ தொடங்கியது என கூறியுள்ளார். ஜாஸ் ஜாம்பவான் ஸ்டீபன் கிராப்பெல்லியுடன் இணைந்து நடித்த ஃபேண்டஸி வித்தவுட் லிமிட்ஸ் மற்றும் கான்வெர்சேஷன்ஸ் போன்ற ஆல்பங்கள் சர்வதேச அளவில் ஹிட்டானது. ஜூபின் மேத்தா போன்ற மேதைகளால் எனது இசை பாராட்டப்பட்டது.
ஆனால் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, வயலினைத் தொட மிகவும் சிரமப்பட்டேன். சென்னையில் தொடங்கிய இசை விரைவில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பரவியது. நான் ஒவ்வொரு பெரிய இசை நிகழ்ச்சிக்கும் முன்பும் விநாயகர் மற்றும் என் தந்தையை வணங்கி தான் தொடங்குகிறேன்.
மேலும் நான் இந்திய வயலின் கலையை உலகளவில் கொண்டு சேர்த்தேன் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், நான் என் தந்தையின் கனவை மட்டுமே முன்னெடுத்துச் செல்கிறேன் எனவும் டாக்டர் எல். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
