காதல் என்றாலும் பார்த்திபன் என்றாலும் வெவ்வேறு இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது படங்களில் காதல் கசிந்துருகும். ஆனால் அப்படிப்பட்ட நடிகர், இயக்குநர் பார்த்திபன் காதலுக்காக எதையுமே தியாகம் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.


அண்மையில் ஒரு யூடியூப் தளத்திற்கு அவர் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவருடைய பேட்டியில் இருந்து:


என் திரைவாழ்வில் எனக்கு ஹவுஸ்ஃபுல், குடைக்குள் மழை கொடுத்த அனுபவத்தை எதுவுமே தந்ததில்லை. கதை திரைக்கதை வசனம் படம் பண்ணபோது தான் பெயருக்காக மட்டுமல்லாமல் கமர்ஷியலாகவும் படம் ஹிட்டாக வேண்டும் என்ற கோட்பாடுடன் எடுத்து வெற்றி பெற்றேன். நான் பண்ண ஆரம்பித்து நிற்கும் படம் கருப்பனசாமி. ரூ.4 கோடிக்கு நான் திட்டமிட்டேன். ரூ.75 லட்சம் வரை செலவழித்து அந்தப் படத்தை கைவிட்டேன். அந்தப் படத்தை அப்போதைக்கு ட்ராப் செய்தேன். அப்போது ஏலேலோ என்று ஒரு படத்தை எடுக்க முயன்றேன். அந்தப் படமும் பல காரணங்களால் ட்ராப் ஆனது. ஆர்.சுந்தர்ராஜனின் தாலாட்டு பாடவா படத்தில் நான் நடித்தேன். அவருடன் நிறைய பிரச்சினை செய்தேன். இப்படி நிறைய அனுபவங்களைப் பெற்றேன்.




காதலுக்காக தியாகம் செய்யாதீர்கள்..


என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்ல விரும்புவது காதலுக்காக யாரும் எந்த தியாகத்தையும் செய்யாதீர்கள். சிறிதோ பெரியதோ நீங்கள் ஒரு தியாகம் செய்து அந்த காதல் திருமணத்தில் முடியும்போது பின்னாளில் சின்னச்சின்ன பிரச்சினை வந்தாலும் கூட செய்த தியாகம் தான் நினைவுக்கு வரும். என்னை நம்பி வந்த சீதா 65 படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர். அவர் எனக்காக எல்லாத்தையும் விட்டுவிட்டு வந்தார். அப்போது அவர் பெரிய தியாகம் செய்து வந்தார். அவருக்கு நிறைய எதிர்பார்ப்பாக இருந்திருக்கும். அதனாலேயே எல்லா பிரச்சினைகளும் வந்தது. விவாகரத்து நட்சத்திர குடும்பங்களில் பூதாகரமாகிறது. சில இடங்களில் கல்யாணம் ஆகி மூன்றே மாதங்களில் கூட விவாகரத்து பெற வந்து நிற்கிறார்கள். நளினி, ராமராஜன் விவாகரத்து பெறக் கூடாது என்று வாதாடினேன்.  


என் வாழ்க்கையைப் பொறுத்த வரை நான் கண்டுபிடித்தது காதலுக்காக எதையும் தியாகம் செய்யக் கூடாது என்பது தான். காதலுக்காக எதையும் கொடுக்காதீர்கள். எதையும் வாங்காதீர்கள். முடிந்தால் காதலை தியாகம் செய்துவிடுங்கள். என் வாழ்வில் பிரிவு தவிர்க்கவே முடியாமல் போனது. நிறைய குடும்பங்களில் குமுறல்களுடன் தான் வாழ்கின்றனர். சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 60 வயது கடந்த நபர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்களுடைய இணையே அடுத்த ஜென்மத்திலும் இணையாக வர வேண்டும் என நினைக்கிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஒருவர் கூட ஆம் என்று சொல்லவில்லை என்பதே ஆய்வு முடிவு.


எனக்கு கடவுள் நம்பிக்கையுண்டு..


எனக்கு கடவுள் நம்பிக்கையுண்டு. தேனாம்பேட்டை ஆலையம்மன், காளிகாம்பாள், ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலில் நான் தவமாய் தவமிருப்பேன். எதுவுமே முடியாத ஒரு நேரத்தில் மன அமைதி கொடுக்கக்கூடியதுதான் ஆன்மீகம். அதுபோல் தான் எனது நியூமராலஜி மீதான நம்பிக்கையும்.


இவ்வாறு பார்த்திபன் கூறினார்.