கொரோனா காலத்தில் ‘டாக்டர்’ சிறந்த சிரிப்பு மருந்தை கொடுத்துள்ளதாக இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று திரையில் வெளியான திரைப்படம் டாக்டர். கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் திரைப்படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்‌ஷன்  நிறுவனம் சார்பில் இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.


இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ நடந்து முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் கொரோனோ தொற்று காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் திரைப்படம் ரிலீஸாகவில்லை.  டாக்டர் படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்ததால், கொரோனா காலகட்டத்தில்  பல்வேறு ஓடிடி தளங்கள் படத்தை வெளியிட படக்குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. 


ஆனால் அப்போதும் டாக்டர் திரைப்படத்தை திரையரங்கில் தான்  வெளியிட முடிவு என படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, நாடு முழுவதும் ‘டாக்டர்’ படம் நேற்று வெளியானது. கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டு படங்கள் வெளியானாலும், எந்தப் படங்களுக்கும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டாத நிலையில், இந்தப் படத்தின் முதல் நாளே தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. படமும் ரசிகர்களை ஏமாற்றாமல் திருப்தி அடையவைத்தது. குறிப்பாக, படம் செம காமெடியாக  இருப்பதால், இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு சிரிப்பு மருந்தாக அமைந்துள்ளது. இன்றும் தியேட்டரில் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், இந்தப் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'இந்த கொரோனா காலங்களில், ‘டாக்டர்’ திரைப்படம் எங்களுக்கு சிறந்த சிரிப்பு மருந்தைக் கொடுத்துள்ளது. அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த இயக்குநர் நெல்சன் திலீப் குமாருக்கு வாழ்த்துக்கள். சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் மொத்த படக்குழுவினருக்கு நன்றி. தியேட்டர் அனுபவம் மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சி’ எனப் பதிவிட்டுள்ளார்.






ஷங்கரின் இந்த பதிவுக்கு சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண