ஒரு சில படங்களுக்கு விமர்சனங்கள் காரணமாக ஹிட் ஆக வேண்டிய படங்களை கூட, ஃபிளாப் ஆகி விடுகிறது. ஆனால் அதே திரைப்படம் டிவியில் அல்லது ஓடிடி தளங்களில் வெளியாகும் போது பாராட்டுக்களை பெறுகின்றன. ஆயிரத்தில் ஒருவன், கங்குவா, போன்ற படங்களை இதற்க்கு உதாரணமாக சொல்லலாம்.
அந்த வகையில், இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் 'தில்லு முல்லு'. ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி, பூர்ணம் விசுவநாதன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கோல் மால் என்ற இந்தி மொழித் திரைப்படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது.
எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் கண்ணதாசன் வரிகளில் இடம்பெற்ற "தில்லு முல்லு" , "ராகங்கள் பதினாறு" ஆகிய பாடலும் ஹிட்டடித்தது. 2013ஆவது ஆண்டு, இப்படம் மறு ஆக்கம் செய்த போது இந்த பாடல்கள் மீண்டும் இடம்பெற்றன. மறு ஆக்கத்தில் நடிகர் சிவா ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்த, விஜி சந்திரசேகர் இந்த படம் குறித்து பேசியுள்ளார். அப்போது 'தில்லு முள்ளு' படம் வெளியான காலகட்டத்தில் ரஜினிகாந்த் தொடர்ந்து ஆக்ஷன் படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். இதன் காரணமாக, காமெடியோடு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடாமல் போனது. படம் சூப்பர் ஃபிளாப் ஆனது.
ஆனால் இந்த படம் இதுவரை சுமார் 200 முறைக்கு மேல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ளது. அதை டிவியில் பார்த்த பின்னரே ரசிகர்கள் கொண்டாட துவங்கினர். இப்படம் ரசிகர்கள் மனதில் ஹிட் படமாக இடம்பெற்றிருந்தாலும் வெளியானபோது தோல்வியை தழுவியதாக கூறியுள்ளார்.