எம்ஜிஆர் என்னை அரசியலுக்கு வர வேண்டாம் என சொன்னார் என இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் தனது கலையுலக வாரிசு என அழைக்கப்பட்டவர் கே.பாக்யராஜ். இன்றளவும் ரசிகர்களால் அந்த வார்த்தை மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
எம்ஜிஆரின் கலையுலக வாரிசு
ஒரு நேர்காணலில் பேசிய பாக்யராஜ், “எம்ஜிஆர் என்னை கலையுலக வாரிசு என சொல்வது மிகவும் பாக்கியம். எம்ஜிஆர் என்றால் சினிமா துறையில் மினிமம் கியாரண்டி ராமச்சந்திரன் என்ற பெயர் உண்டு. அதேபோல் என் படங்களிலும் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லாமல் வசூல் பண்ணி கொடுத்தது ஒரு காரணமாக சொல்லலாம். அதேசமயம் எம்ஜிஆர் படங்களில் பெண்களை கவரும் வகையில் ஆபாசம் இல்லாமல் குடும்பங்கள் பார்க்கும் அளவுக்கான காட்சிகளும், நல்ல கருத்துகளும் இருக்கும். அதேபோல் என் படங்கள் மூலம் பெண்களின் ஆதரவு மிகவும் அதிகமாக இருந்தது.
பெண்களுக்கு மட்டுமே காட்சி என்பது தியேட்டரில் ரொம்ப அரிதாக இருந்தது. ஆனால் என்னுடைய படங்கள் ரிலீசாகும்போது பெண்களுக்கு பிரத்யேக காட்சிகள் போடப்பட்டது. இதனையெல்லாம் எம்ஜிஆர் கவனித்துள்ளார். என்னை விட பாக்யராஜூக்கு பெண்கள் ஆதரவு அதிகம் உள்ளது என தன் நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருக்கிறார். இது உண்மை என எனக்கு தெரியும் என்று எம்ஜிஆர் கூறியிருக்கிறார்.
அதிமுகவில் சேர வேண்டாம் - எம்ஜிஆர்
அதுமட்டுமல்லாமல் திமுக - அதிமுக பிரிவினை ஏற்பட்டபோது எம்ஜிஆர் மேல் பற்று இருந்தவர்கள் கூட கருணாநிதி மேல் கொண்ட அன்பால் அவரை வெறுக்க ஆரம்பித்தார்கள். அப்படியான சூழல் உருவானது. அந்த நேரத்தில் என்னிடம் எம்ஜிஆர், நீ என்னோட ரசிகன்னு தெரிந்தாலும் கூட திமுகவினர் உன் படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். அதுதான் உனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சொத்து என கூறினார்.
ஒருமுறை தேர்தலில் எம்ஜிஆர் செய்ய வேண்டியது பற்றி நான் சொன்ன கருத்து பேசுபொருளான நிலையில் எம்ஜிஆர், பாக்யராஜ் எம்ஜிஆர் கட்சி தொண்டன் கிடையாது. அவன் ஒரு சினிமா ஆளு. என்னோட ரசிகன் அவ்வளவு தான். அதனால் அவன் சொன்னதை வெளிப்படுத்த வேண்டாம் என மற்றவர்களிடம் கேட்டுக்கொண்டார். பிறகு என்னை அழைத்து, நீ என் ரசிகனாக இருக்கும் வரையில் அவ்வளவு பேரும் உன் படத்தை ரசித்து பார்க்கிறார்கள். அது தொடரும். ஒருவேளை அதிமுக தொண்டன் என வந்து விட்டால் வீட்டில் இருக்கும் பெண்களை கூட உன் படம் பார்க்கக்கூடாது என சொல்லி விடும் அளவுக்கு தீவிரமாக இருந்து விடுவார்கள். எனவே தப்பித்தவறி கூட அரசியல் பற்றி பேசிவிட வேண்டாம் என சொன்னார் என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.
