பிரஷாந்த்:
சினிமாவில் தோல்விகளை சந்தித்து வரும் நடிகர், நடிகைகளுக்கு ஏதாவது ஒரு படம் டர்னிங் பாய்ண்டாக இருக்கும். அப்படி தான் நடிகர் பிரசாந்திற்கும் ஒரு படம் திருப்பு முனையை கொடுத்தது. 1998 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் தான் ஜீன்ஸ். இந்தப் படத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் இணைந்து ஐஸ்வர்யா ராய், லட்சுமி, நாசர், ராதிகா, செந்தில், எஸ் வி சேகர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
பிரஷாந்த் நடிப்பில் வெளியான பல படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுத்திருந்தாலும், பிரசாந்திற்கு 'ஜீன்ஸ்' ஒரு மாஸ்டர் பீஸ் என கூறலாம். இந்த நிலையில் பிரசாந்தின் ஜீன்ஸ் படம் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார். இது குறித்து அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால், "முதலில் விஜய்யை வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாக இருந்தது. ஆனால், அந்தப் படம் கால்ஷீட் பிரச்சனை காரணமாக தள்ளிக் கொண்டே சென்றது. இதையடுத்து எஸ் ஏ சந்திரசேகரிடம் நானும் என்னுடைய அப்பாவும் சென்று விஜய்யின் கால்ஷீட்டை சரி செய்து கொடுக்க சொல்லி கேட்டோம். ஆனால், அதற்கு அவரோ, விஜய் மாதிரியே ஒரு பையன் இப்போது வளர்ந்து வருகிறான். அவன் தான் அஜித். அவனை வைத்து ஒரு படம் எடுத்து முடித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக அஜித்திடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் ஒரு படத்துக்கு ரூ.10 லட்சம் கேட்டார். அது எங்களுக்கு அதிகமாக இருந்தது. அடுத்தகட்டமாக சூர்யாவை முயற்சி செய்தோம். ஆனால், அவர் படத்திற்கான ஆடிஷனில் தேர்வு செய்யப்படவில்லை. கடைசியாக பிரசாந்திடம் சென்றோம். அவர் அப்போது மார்க்கெட் டவுனில் இருந்தார்.
3 வருடம் தியாகம் செய்த பிரஷாந்த்:
அவரும் படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். படத்திற்கான சம்பளம் பேசப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டார் பிரசாந்த். ஆனால், அப்போது போடப்பட்ட பட பூஜையில் பிரசாந்த் கலந்து கொள்ளவில்லை. பூஜை போடப்பட்டு 2 நாட்கள் கழித்து பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் இருவரும் எங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். ஜீன்ஸ் படத்தில் நடிக்க பிரசாந்திற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், இயக்குநர் ஷங்கர் 3 வருடம் கேட்டிருக்கிறார். 3 வருடமும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால், ஷங்கர் படத்தில் நடிக்க நீங்கள் உங்களது படத்தை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும் என்று தியாகராஜன் கேட்டுக் கொண்டார். மேலும், படத்தின் பூஜைக்கான செலவுடன் சேர்த்து கூடுதலாக ரூ.2 லட்சம் தருவதாக கூறினார். பட பூஜைக்கு ரூ.2 லட்சம் செலவு செய்யப்பட்டிருக்கிறது. பிரசாந்தை உங்களது மகனாக நினைத்து இந்த உதவியை செய்யுங்கள் என்று கேட்கவே அவர்களும் பிரசாந்தை தங்களுடைய மகனாக கருதி பூஜைக்கு செலவு செய்யப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை மட்டுமே பெற்று கொண்டனர். இது போன்ற சில தியாகங்களால் தான் பிரசாந்த் ஜீன்ஸ் படத்தில் நடிக்க முடிந்தது என்று அவர் கூறியுள்ளார்.