காதலர் தினம் நாளை பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களது முதல் காதல் அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். காதல் ஜோடிகளுக்கு நாள்தோறும் காதலர் தினமாக இருந்தாலும் இந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பலர் தங்களின் முதல் காதல் அனுபவத்தையே, அல்லது முதல் காதலியை நினைத்து பார்ப்பது உண்டு.
சமீபத்தில் கூட நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய முதல் காதல் பற்றி பேசி இருந்த தகவல், சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதே போன்று தான் ஆக்ஷன் கிங் அர்ஜூனும், திருமணத்திற்கு முன்னதாக பிரபலம் ஒருவரை காதலித்திருக்கிறார். அவரும் ஒரு நடிகை தான். அந்த நடிகை யார் என்பதை அர்ஜுன் வெளியே சொல்லவில்லை என்றாலும், தமிழ் திரையுலகிற்கு இந்த காதல் கதை மிகவும் பரிச்சியம்.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று பெயர் எடுத்தவர் அர்ஜூன். ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

சும்ஹாடா மரி சனியா என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் அர்ஜுன். அப்போது இவருக்கு வெறும் 19 வயது தான். அதன் பிறகு ஆஷா, பிரேமா யுத்தா, பூஜா பாலா, பிரேமா ஜோதி போன்ற பல படங்களில் நடித்தார்.
நன்றி என்ற படம் தமிழ் சினிமாவிலும் நுழைந்த அர்ஜுன், அடுத்தடுத்து கடமை, நாகம், இளமை, வேஷம், எங்கள் குரல், யார், அவன், ஜெய்ஹிந்த், சங்கர் குரு என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி மொழியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். நடிகை நளினியுடன் இணைந்து நன்றி, யார், எங்கள் குரல் ஆகிய படங்களில் அர்ஜுன் நடித்த போது, அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார்.
தனது காதலை வெளிப்படுத்த சரியான நேரம் பார்த்து அர்ஜுன் காத்திருந்த போது தான், ராமராஜனும், நளினி காதலிக்கும் விஷயம் இவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஒருதலை காதலால் அதிகளவில் பாதிக்கப்பட்ட அர்ஜூன் தனது காதலை வெளிப்படுத்தவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் தவித்துள்ளார். பின்னர் நளினி ராமராஜனுடன் ஓடி போய் திருமணம் செய்து கொண்டார்.
இதன் பின்னர், நளினியை மறந்து 1988 ஆம் ஆண்டு அர்ஜூன் பெங்களூருவைச் சேர்ந்த நடிகை நிவேதா என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். நிவேதாவும் அக்னி பரவா, ரத்த சப்தமி, டாக்டர் கார் அப்பாய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நிவேதா ஒரு நடிகை மட்டுமின்றி டான்ஸராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மேலும், ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை அர்ஜூன் உடன் இணைந்து நடத்தி வருகிறார். அர்ஜூன் இயக்கும் படங்களுக்கு இந்த நிறுவனம் ஸ்டூடியோவாக இருந்து வருகிறது. இந்த ஸ்டூடியோவில் நிர்வாக தயாரிப்பாளராக நிவேதா இருக்கிறார். அவருடன் இணைந்து அவரது மகள்களான ஐஸ்வர்யா, அஞ்சனா ஆகியோர் தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.
அர்ஜூன் சமீப காலமாக திரைப்படங்களில், ஹீரோவாக நடிக்கவில்லையென்றாலும் கூட வில்லன், குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார். கடந்த 6ஆம் தேதி அஜித், ரெஜினா, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் வில்லன் ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அகத்தியா, சீதா பயணம், தீயவர் குலைகள் நடுங்க ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அகத்தியா படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.