திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக சட்டமன்ற  இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தவெக சார்பாக நடிகர் மற்றும் சமூக செயற்பாட்டாளரான ராகவா லாரன்ஸ் போட்டியிட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ராகவா லாரன்ஸ் தவெகவில் இணைவது குறித்து திமுக ஆதரவாளர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். ராகவா லாரன்ஸ் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்த உதவியை மறந்து திமுகவுக்கு ராகவா லாரன்ஸ் துரோகம் செய்துவிட்டதாக திமுக ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். 

Continues below advertisement

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றார். முதலமைச்சராக பதவியேற்றப் பின் திருச்சி கிழக்கில் தனது எம்.எல்.ஏ பதவியை விஜய்  ராஜினாமா செய்துள்ளார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தவெக சார்பாக யார் திருச்சி கிழக்கில் போட்டியிடப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முன்னதாக தவெக சார்பாக திருமாவளவன் போட்டியிடுவார் என கூறப்பட்ட  நிலையில் திருமாவளவன் இந்த தகவலை மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகரும் சமூக சேயற்பாட்டாளருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என கூறப்பட்டது.

இது குறித்து ராகவா லாரன்ஸ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். "  நான் தற்போது 'பென்ஸ்' படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறேன், எனது படப்பிடிப்பு 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. என் தாயின் ஆசீர்வாதங்களுடன், என் வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவு வரும் 11ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும்." என தெரிவித்துள்ளார். 11 ஆம் தேதி லாரன்ஸ் தவெகவில் இணைவதை உறுதிபடுத்துவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திமுக ஆதரவாளர்கள் ராகவா லாரன்ஸ் திமுகவை பாராட்டி பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Continues below advertisement

கலைஞர் செய்த உதவி

முன்னாள் திமுக ஆட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் முன்னாள் முதலைமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களை புகழ்ந்து பேசினார்." தனது ஆசிரமத்தைச் சேர்ந்த 48 குழந்தைகளுக்கு கலைஞர் கருணாநிதி இதய அறுவை சிகிச்சை செய்து வைத்ததாக அவர் கூறியுள்ளார். கருணாநிதியைப் போலவே அவரது பேரன் உதயநிதி ஸ்டாலினும் தனது ஆசிரமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோவை பகிரும் திமுக ஆதரவாளர்கள் கலைஞர் செய்த உதவியின் நன்றியை மறந்து லாரன்ஸ் செய்ல்படுவதாக அவரை விமர்சித்து வருகிறார்கள்.