தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்தார். அரசியலுக்கு வந்த பிறகும் இவரது ரெட் ஜெயண்ட் நிறுவனம் தொடர்ந்து படத்தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்தது.

Continues below advertisement

மீண்டும் நடிக்கிறாரா உதயநிதி?

இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பலரும் கருதியிருந்த நிலையில், அவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்தனர். ஸ்டாலின் தோல்வி அடைந்த சூழலில், சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ளார்.

எதிர்க்கட்சியாக திமுக தற்போது பொறுப்பு வகிக்கும் சூழலில், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிப்பாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற படம் வெளியாகியது. 

Continues below advertisement

தயாரிப்பாளர் - நடிகர்:

ஆதவன் படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் அறிமுகமான உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். காமெடி திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் சென்று சேர்ந்த உதயநிதி ஸ்டாலின், இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா ஆகிய நகைச்சுவை படங்களில் நடித்தார். நடிகராக மக்கள் மத்தியில் நன்றாக சென்று சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் மனிதன் படத்திற்கு பிறகு நல்ல கதைக்களம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்திருப்பார். சைகோ, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்கள் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றது. தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் அங்கம் வகித்தாலும் அவரை மீண்டும் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் தங்கள் கட்சி செல்வாக்கை மீண்டும் வலுப்படுத்துவதற்காகவும் அவர் திரைப்படங்களில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகள் சிலரும் விரும்புகின்றனர்.

காத்திருக்கும் பொறுப்புகள்:

தற்போது மு.க.ஸ்டாலினும் தோல்வி அடைந்திருப்பதால் கட்சியில் கூடுதல் பொறுப்புகளை அவர் கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி பொறுப்பு வகித்தால் அவர் நடித்தால் அதற்கு கண்டனம் குவியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கட்சியின் எதிர்கால தலைவராக பல்வேறு பொறுப்புகளும் உதயநிதிக்கு இருப்பதால் அவர் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் அதை ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிக்க வந்தால் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் யாராவது அந்த படத்தை இயக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.