இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டி இளம் நடிகர்கள் நடித்துள்ள மூன்று திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள பிரதீப் ரங்கநாதனின் டியூட் , கபடியை மையமாக வைத்து உருவாகியுள்ள மாரி செல்வராஜின் பைசன் மற்றும் ஹரிஷ் கல்யாணின் ஆக்ஷன் அவதாரம் டீசல் . இந்த மூன்று படங்களில் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெறும் படமே தீபாவளி ரேஸில் வெற்றிப்படமாக அமையும்.
வெற்றிப்பாதையில் டியூட்
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ நடித்துள்ள ரொமாண்டிக் காமெடி திரைப்படம் டியூட். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படமான டிராகன் திரைப்படம் மிகப்பெரிய கமர்சியல் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து டியூட் படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கதை ரீதியாக ஏற்கனவே நாம் பார்த்தது தான் என்றாலும் இப்படத்தின் கருத்து இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் தனித்துவமான நடிப்பு , காமெடி காட்சிகள் , சாய் அப்யங்கரின் இசை என திரையரங்கில் கலகலப்பாக பார்த்து ரசித்து வரக்கூடிய படமாக உருவாகியுள்ளது டியூட்.
பைசன் காளமாடன்
ஒவ்வொரு முறையில் மறுக்க முடியாத வகையில் தனது மண்னையும் மக்களையும் தனது கதைகளின் வழியாக பதிவு செய்து வருகிறார் மாரி செல்வராஜ். அந்த வரிசையில் கபடி வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி உருவாகியுள்ளது பைசன். துருவ் விக்ரம் , ரஜிஷா விஜயன் , பசுபதி , அமீர் , அனுபமா பரமேஸ்வரன் , லால் என பல சிறந்த நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். நேர்த்தியான திரைக்கதை , துருவ் விக்ரமின் அசாதாரணமான நடிப்பு , விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் கபடி காட்சிகள் என பைசன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
டீசல்
புதிய கதையம்சங்கள் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் டீசல். முன்னதாக வெளியான பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து இரு படங்களும் கமர்சியல் வெற்றிபெற்றன. டீசல் படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கவில்லை என்றாலும் விமர்சகர்களிடம் படம் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்றுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்
தற்போதைய நிலைப்படி பைசன் மற்றும் டியூட் ஆகிய இரு படங்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பைசன் படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் டியூட் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது