தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் இடம் பெற்றுள்ளது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஓடிடி தளங்களின் பயன்பாடு


கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஓடிடி தளங்களின் பயன்பாடு என்பது இந்தியாவில் அதிகரித்து விட்டது. இருக்கின்ற இடத்திலேயே உலக மொழிகளில் வெளியான படங்கள், வெப் தொடர்கள், சீரியல்கள் என அனைத்தையும் கண்டு விடலாம் என்பதால் நாளுக்கு நாள் இதன் வாடிக்கையாளர்களும் அதிகரித்து வருகின்றனர். தொலைக்காட்சி சேனல்களும் தங்களுக்கென பிரத்யேக ஓடிடி தளங்களை கொண்டுள்ளது. 


அதேசமயம் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்,  ஆஹா, சோனி லைவ், ஜீ5  என ஏகப்பட்ட ஓடிடி தளங்கள் உள்ளூர் படம் முதல் உலக படம் வரை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெரிய நடிகர்களின் படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்போதே அது எந்த ஓடிடி தளத்திற்கு விற்கப்படுகிறது என்பதும் அனைவராலும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் சரியாக 4 வாரத்திற்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகும். இதற்கென தனி கட்டணங்களும் நிர்ணயிக்கப்படுகிறது. 


இப்படியான நிலையில் ஓடிடி வருகையால் பழைய படங்களையும் நாம் காத்திருக்காமல் உடனுக்குடன் கண்டு மகிழ்கிறோம் என்பதால் இது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படும் விஷயமாக மாறிவிட்டது. இதனிடையே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பழைய படங்கள் சில ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் இடம் பெற்றுள்ளது.


ரஜினி மற்றும் கமலின் படங்கள் 


2009 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘குசேலன்’. இந்த படத்தில் பசுபதி,மீனா, நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். இந்த படம் தியேட்டரில் வெளியாகி படுதோல்வி அடைந்தது. ஆனால் குசேலன் படத்தில் காட்டபட்ட ரஜினி - பசுபதி தொடர்பான நட்புறவு இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாகவே உள்ளது. 


இதேபோல் கமல் முழுக்க பெண் வேடத்தில் தோன்றிய சூப்பர்ஹிட் படமான அவ்வை சண்முகியும் ஹாட் ஸ்டார் தளத்தில் இடம் பெற்றுள்ளது. அதேசமயம் கமலின் எவர்க்ரீன் மூவியாக கொண்டாடப்படும் ‘அன்பே சிவம்’ படமும் இடம் பெற்றுள்ளது. 


விஜய்யின் 3 படங்கள்


நடிகர் விஜய்யின் 3 முக்கிய படங்களும் ஹாட் ஸ்டார் தளத்திற்கு வந்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவான “ப்ரண்ட்ஸ்”. விஜய் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய ‘பகவதி’ மற்றும் ‘மதுர’ ஆகிய படங்களின் டிஜிட்டல் உரிமம் கைமாறியுள்ளது. 


மேலும் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜீன்ஸ்’, விஷால் நடித்த ‘செல்லமே’, பிரபுதேவா நடித்த ‘மின்சார கனவு’, விக்ரம் நடித்த ‘கிங்’ ஆகிய படங்களின் டிஜிட்டல் உரிமம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் பெற்றுள்ளது.