சிண்ட்ரெல்லா, ராப்புன்செல், ஸ்னோ வைட், ஆரோரா, ஜாஸ்மின் என ஒட்டுமொத்தமாக 40 உலகப் புகழ்பெற்ற பிரின்செஸ்களை உருவாக்கிய பெருமை டிஸ்னி அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உண்டு. அந்த வகையில் ’ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ஃப்’ படத்தை மீட்டுருவாக்கம் செய்யப் போவதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்திருந்தது.
இதை அனிமேஷன் பட விரும்பிகள் பலரும் வரவேற்றிருந்த நிலையில் கேம் ஆஃப் தார்ன்ஸ் தொடரில் நடித்த நடிகர் பீட்டர் டிங்க்லேஜ் கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது விமர்சனத்துக்கு தற்போது அந்த நிறுவனம் மறுமொழியும் அளித்திருக்கிறது. டிங்க்லேஜ் தனது விமர்சனத்தில், ‘டிஸ்னி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிப்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். அந்த நிறுவனம் பின் தங்கியே உள்ளது. ஸ்னோ வைட் கதாப்பாத்திரத்தில் ஒரு லத்தீன் நடிகரை நடிக்க வைக்க எடுத்த பிரயத்தனத்தில் குள்ள நடிகர்களை காட்சிப்படுத்துவதிலும் காட்டியிருக்கலாம்’ என விமர்சித்திருந்தார்.
டிங்க்லேஜ் அக்கோண்ட்ராப்ளாசியா எனப்படும் வளர்ச்சிக் குறைப்பாட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்.
‘ஒரு பக்கம் லத்தீன் நடிகரை ஸ்னோ வைட்டாக நடிக்க வைப்பது வரவேற்கப்படுவதுதான் என்றாலும் மற்றொரு பக்கம் அவர்கள் பின் தங்கிவிட்டார்கள்’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்திருக்கும் டிஸ்னி நிறுவனம், ‘லைவ் ஆக்ஷன் முறையில் தயாரிக்கப்படும் இந்தப் படம் ஒரு புதிய உத்தியைக் கையாள இருக்கிறது. இதற்காக வளர்ச்சிக் குறைபாடு உடைய மக்கள் குழுக்களிடம் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.இதுபற்றி இன்னும் பல தகவல்கள் விரைவில் வெளிவரும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். 1937ல் வெளிவந்த படத்தின் ரீமேக்காக இது இருக்கும்.ஆனால் இதில் ஸ்டீரியோடைப் அம்சங்களை நீக்க முயற்சித்துள்ளோம்’ என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
அண்மையில் அமேசான் பிரைமில் டிஸ்னியின் நவீன சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியாக பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.