காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் த கேரளா ஸ்டோரி முதலிய படங்களை தான் பார்க்காமல் தவிர்த்து விட்டதாகவும் அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார் பாலிவுட் இயைக்குநர் விஷால் பரத்வாஜ்.
விஷால் பரத்வாஜ்
சமகால பாலிவுட் இயக்குநர்களில் குறிப்பித்தகுந்த ஒருவராக கருதப்படுபவர் விஷால் பரத்வாஜ். மக்பூல், கமினே, ஹைதர், ஓம்காரா உள்ளிட்ட படங்களிய இயக்கிய விஷால் பரத்வாஜ், மாறுபட்ட கதைகள், தனது கதைகளுக்குத் தேவையான அரசியல் என தனித்துவமானப் படங்களை இயக்கி பாலிவுட்டின் முக்கிய இயக்குநராக வலம் வருகிறார்.
ஷாஹித் கபூரை வைத்து இவர் இயக்கிய ஹைதர் திரைப்படம் அவரது திரைப்படங்களில் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் ‘ஹேம்லட்’ என்கிற நாடகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் காஷ்மீரில் நடந்து வரும் பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட விஷால் பரத்வாஜ், பல்வேறு சமூக நிகழ்வுகள் தொடர்பான கேள்விகளுக்கு தன்னுடைய கருத்துக்களைக் கூறினார்.
‘கேரளா ஸ்டோரிப் படத்தை ஏன் பார்க்கவில்லை’
கடந்த ஆண்டு வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் இந்த ஆண்டு வெளியான கேரளா ஸ்டோரி ஆகிய இரண்டு படங்களும் மிகபெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. அதே நேரத்தில் இரண்டு படங்களும் பல்வேறு சமூக விமர்சனங்களை எதிர்கொண்டன. இரண்டு படங்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கிய வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டன. இந்தப் படங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த விஷால் பரத்வாஜ் இவ்வாறு பேசியுள்ளார்.
“காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் த கேரளா ஸ்டோரி ஆகிய இரண்டு படங்களையும் நான் பார்க்கவில்லை. இந்தப் படங்களைப் பார்க்க வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். இந்தப் படங்கள் வெறுப்பு பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக என்னுடைய நண்பர்கள் அனைவரும் கூறினார்கள்.
இது மிக சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் என்பதால் இதில் இருந்து விலகி இருக்கவே நான் முடிவு செய்தேன். உண்மையாகவே இந்தப் படங்களில் தவறான கருத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றால் அதில் இருந்து விலகி இருக்கவே நான் விரும்புகிறேன். என்னுடைய அமைதியை கெடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. நிஜ சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களில் படைப்பாளிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்“ என்று அவர் கூறினார்.
சமூகம் மாறி வருகிறது..
பாலிவுட்டில் திரைப்படங்கள் எடுப்பதற்கான நோக்கம் மாறியுள்ளதா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், “சினிமா என்பது அப்படியான ஒரு ஊடகம். உங்களுக்குத் தேவையான வகையில் நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதை மக்கள் பார்த்து ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் நம் சமூகம் மாறி வருகிறது என்றுதான் அதற்கு அதுதான் அர்த்தம். ஒரு சமூகமாக நாம் மாறி வருகிறோம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சமீபத்தில் நிகழும் குழு வன்முறைகளுக்கு நாம் இப்போதெல்லாம் நாம் பழகிவிட்டிருக்கிறோம். முன்பெல்லாம் ஒரு வன்முறை கும்பல் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மனிதரை அடித்துக் கொல்கிறார்கள் என்றால் இது எப்படி நடக்கலாம், சட்டம் என்ன செய்கிறது என்று அதிர்ச்சியடைந்து உணர்ச்சிவசப்படுவோம், ஆனால் இப்போதெல்லாம் அப்படியான நிகழ்வுகள் அடிக்கடி நடந்தாலும் அது நம்மை எந்த வகையிலும் பாதிப்பது இல்லை. காரணம் நாம் அதற்கு பழகிவிட்டிருக்கிறோம். இந்த மாதிரியான நிகழ்வுகளுக்கு நாம் எதிர்வினையாற்ற மறந்துவிட்டோம்” என்று விஷால் பரத்வாஜ் கூறியுள்ளார்.