கருடன்


விடுதலை படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடித்துள்ள கருடன் கடந்த மே 31ஆம் தேதி வெளியானது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், வடிவுக்கரசி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விடுதலை படம் சூரிக்கு நாயகனாக நல்ல ஒரு ஓப்பனிங்காக அமைந்தாலும், சூரி முதல்முறையாக ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கிய படம் கருடன். விறுவிறுப்பான ஒரு கிராமத்து சப்ஜெக்ட், சூரியின் எதார்த்தமான நடிப்பு, துருத்திக் கொண்டு தெரியாத ஆக்‌ஷன் காட்சிகள், யுவனின் பின்னணி இசை என ஒரு பக்கா ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக வெற்றிபெற்றுள்ளது கருடன் படம்.


கடந்த 15 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்து இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது கருடன். கருடன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இன்று சென்னையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி இப்படத்தில் வேலை செய்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த இயக்குநர் வெற்றிமாறன் கருடன் படத்தின் வெற்றி இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் மிக முக்கியமான வெற்றியை பதிவு செய்துள்ளதாக கூறினார் வெற்றிமாறன்


ஜனநாயக முறையில் வெற்றிபெற்ற படம் கருடன்


 நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன் “ இன்றைய சூழலில் திரையரங்குகளில் படங்கள் வெளியிட்டார் ஓடாது  என்கிற மனநிலை வளர்ந்துவிட்டது. அதற்கு ஏற்றபடிதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் ஒரு மாடலை செட் செய்திருக்கிறோம். ஒரு படம் ஓடிடி மற்றும் சாடலைட் விற்பனை செய்து போட்ட பணத்தை எடுத்துவிட்டால் போது திரையரங்கில் படம் ஓடினால் அதை போனஸாக எடுத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள். ஓடிடி நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான கதைகள் என்றால் அதற்கு அதிக விலை கொடுத்து படத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.  இது ஒரு நல்ல விஷயம் தான் என்றாலும் ஒரு படம் திரையரங்கத்தில் வெளியாகி அதற்காக செலவிடப் பட்ட பணத்தை திரையரங்கத்தின் வழியாக திருப்பி எடுப்பது தான் நீண்ட கால வழக்கமாகவும்  ஜனநாயகமான முறையும் கூட. அந்த வகையில் இந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வெற்றிபெற்ற  ஒரு சில படங்களில் கருடன் படமும் ஒன்று. ஜனநாயக முறைப்படி கருடன் படம் வெற்றிபெற்றுள்ளது. “ என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.