டைனோசரை வைத்து நீங்கள் படம் எடுத்தாலும் கதை நன்றாக இருந்தால் தான் படம் ஓடும் என்று கள்வன் பட இசைவெளியீட்டில் இயக்குநர் வெற்றிமாறன் 


கள்வன்


ஜி.வி பிரகாஷ் , இவானா , பாரதிராஜா, தீனா ஆகியோர் நடித்து உருவாகி இருக்கும் படம் கள்வன். பி.வி.சங்கர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியும் உள்ளார். ஆக்ஸிஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது. கள்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு கடந்த சில நாட்கள் முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் லிங்குசாமி, பேரரசு, வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில் இயக்குநர் பேரரசு பேசிய கருத்திற்கு எதிராக இயக்குநர் வெற்றிமாறன் பேசிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


யானை என்றால் பிள்ளையார்தான்


நிகழ்வில் பேசிய இயக்குநர் பேரரசு இயக்குநர் பாரதிராஜா, நடிகர் ஜி.வி பிரகாஷ் ஆகியோரை பாராட்டி பேசினார். நாயகி இவானா பற்றி அவர் பேசியபோது "பாவாடை தாவனியில் பார்க்க அழகாக இருக்கும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நைட்டியில் பார்த்து அழகாக தெரிந்த நடிகை இவானாதான் " என்று குறிப்பிட்டு சொன்னது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.


தொடர்ந்து பேசிய அவர். " இந்த படம் யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. யானைகளை மையமாக வைத்து எம்.ஜி.ஆர் நடித்த நல்ல நாள் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதே மாதிரி ரஜினிகாந்த் நடித்த அன்னை ஒரு ஆலயம் படம் அவரை ஒரு நடிகராக அடையாளம் காட்டியது. சமீபத்தில் வெளியான கும்கி படமும் வெற்றிபெற்றது. யானை என்பது தமிழ் சினிமாவிற்கு எப்போதும் ராசிதான். யானை என்றால் பிள்ளையார்தான். இந்தப் படங்களைப்போல் கள்வன் படமும் மிகப்பெரிய வெற்றிபெற என்று நான் வாழ்த்துகிறேன்" என்று பேசினார்.


டைனோசர் வெச்சு பண்ணாலும் கதை நல்லா இருக்கணும்


பேரரசைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், விடுதலை படத்தில் இயக்குநர் பாரதிராஜாவை நடிக்க திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அடர் மலைக்காட்டில் படப்பிடிப்பு என்பதால் அவரை சிரமப்படுத்த வேண்டாம் என்று இந்த முடிவை கைவிட்டதாக கூறினார்.


கள்வன் படத்தில் ஜி.வி மற்றும் இவானா, ஜி.வி மற்றும் தீனாவுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் "நான் இதை சொல்வதால் சர்ச்சை ஆகும் என்றாலும் இதைச் சொல்கிறேன். நீங்கள் யானையை வைத்து படம் எடுத்தாலும் டைனோசரை வைத்து படம் எடுத்தாலும் கதை மற்றும் திரைக்கதை நன்றாக இருந்தால் மட்டுமே ஒரு படம் ஓடும்" என்று பேரரசு பேசியதற்கு எதிர்கருத்து தெரிவித்து மேடையில் இருந்து இறஙகினார்.


வெற்றிமாறனின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.