நாம் எதை வைத்து எடுத்தாலும் கதை நன்றாக இருந்தால் தான் படம் ஓடும் என இயக்குநர் வெற்றிமாறன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கோபித்துக் கொண்ட பாரதிராஜா:
அறிமுக இயக்குநர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘கள்வன்’. இந்த படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க டில்லிபாபு தயாரித்துள்ளார். ஏப்ரல் 4 ஆம் தேதி கள்வன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், லிங்குசாமி, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “கள்வன் படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் உள்ளது. நான் விடுதலை படத்தில் பாரதிராஜா தான் நடிக்க வேண்டும் என முடியெல்லாம் வெட்டி லுக் டெஸ்ட் பண்ணேன். நான் லொகேஷன் பார்க்க சென்ற பிறகு அவர் வேண்டாம் என நினைத்தேன். அதற்கு என்னிடம் பாரதிராஜா செல்லமாக கோபித்துக் கொண்டார். அதன்பிறகு கொஞ்ச நாள் கழித்து, இதே முடியோடு என்னை வைத்து ஒருத்தர் படம் எடுக்கப் போறாருன்னு சொன்னாரு. அது தான் கள்வன் படம்.
கதை நல்லா இருந்தாதான் ஓடும்:
நாங்க விடுதலை படம் ஷூட் பண்ண இடத்தில் தான் கள்வன் படமும் ஷூட் பண்ணினார்கள். காட்டில் படப்பிடிப்பு என்பது ரொம்ப கஷ்டம். ஒளிப்பதிவாளருக்கு எவ்வளவு சவால் இருந்திருக்கும் என்பது தெரியும். ஒரு படத்துக்காக காத்திருப்பது என்பது மற்றவர்களை விட இயக்குநருக்கு ரொம்ப சவாலாக இருந்திருக்கும். 6 மாதம் வரை ஒரு நம்பிக்கை வரும். பின் போகும், திரும்ப நம்பிக்கை வரும் என பல விஷயங்கள் உள்ளது.
நம்ம யானையை வைத்தோ, டைனோசரை வைத்தோ படம் எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நல்லா இருந்தா மட்டும் தான் படம் ஓடும்” என தெரிவித்தார்.
வெற்றிமாறனின் சினிமா பயணம்
தனுஷ் நடித்த பொல்லாதவன் படம் தமிழில் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் பல படங்களுக்கு தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது விடுதலை படத்தின் 2 ஆம் பாகம் எடுத்துள்ள நிலையில், அப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை எடுக்க வெற்றிமாறன் முன்னோட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 40 years of Poovilangu: 4 பிரபலங்கள் அறிமுகமான பூவிலங்கு படம்.. இசையால் தூக்கி நிறுத்திய இளையராஜா!