தென்னிந்திய திரைப்படங்கள் மண் சார்ந்த கதைகளைப் பேசுவதே அதன் வெற்றிக்கு முக்கியம் காரணம் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். அதோடு, மக்கள் சார்ந்த வாழ்வியை சொல்லும் திரைப்படங்கள் சர்வதேச அளவிலும் அதன் உணர்வுகள் புரிந்துகொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


சென்னை, கிண்டியில் ‘தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு’ (Dakshin Media & Entertainment Summit 2023) நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி திரைப் பிரபலங்கள் பங்கேற்ற கருத்தரங்குகள் நடைபெற்றன.


முதல் நாள் நிகழ்வில், நடிகர் கார்த்தி சிவக்குமார், இயக்குநர் வெற்றிமாறன், நடிகை மஞ்சு வாரியர், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி மாறன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் சினிமா துறையில் முன்னணி இயக்குநர், தனிவழியிலோர் கதை சொல்லி வெற்றிமாறன் திரைப்படம் தயாரிப்பது, சினிமா துறை, அதில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.


கலைக்கு மொழி உண்டு:


அப்போது அவர் பேசுகையில், “கலைக்கு மொழி; எல்லைகள் இல்லை என சொல்வார்கள். ஆனால் கலைக்கு நிச்சயம் மொழி உண்டு; எல்லைகள் உண்டு; கலாச்சாரம் உண்டு. ஆனால்,  கலையை நுகர்பவர்களுக்கு எல்லைகள் இல்லை. கலை அதன் எல்லைகளுக்குள் நின்று செயல்படும்போது எல்லை கடந்துபோதும்.” எனத் தெரிவித்துள்ளார். இதனை கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது உணர முடிந்ததாக வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார்.


”கொரோனா ஊரடங்கின் போது நாம்  ஒடிடி தளங்களையும் பயன்படுத்தத் தொடங்கினோம். இதனால்,  பல்வேறு காலகட்டங்களில், பல நாடுகளிலிருந்து வெளிவந்த பல திரைப்படங்களை ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவானது. திரையரங்குகளுக்கு சென்று பார்க்கும் நிலை தற்போது மாறியிருக்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சினிமா நுகர்வு என்பது மாறியிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார். 


பான் இந்தியன் மூவிஸ்


பான் இந்தியன் திரைப்பட்டங்கள் என்று சொல்லப்படுகிறவை சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கில் எடுக்கப்படுகிறதா என்பது குறித்து வெற்றிமாறன் பேசுகையில்,” பான் இந்தியா திரைப்படங்கள் சர்வதேச மக்களை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நமது மண்ணைச் சார்ந்து, நமது மக்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் சர்வதேச அரங்கங்களுக்கு செல்கின்றன.மண்ணு வெளியே உள்ள மக்களை கவர வேண்டும் என்ற நோக்கில் யாரும் படங்களை எடுக்கவில்லை.  நம்முடைய கதைகளை நாம் சொல்லும்போது அதிலிருந்து வரும் உணர்வுகள் பலரும்  ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளன.” என்று தெரிவித்துள்ளார். 


கே.ஜி.எஃப், காந்தாரா, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட திரைப்படங்கள் எல்லா தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணம், அவை அந்தந்த பகுதிகளின் மக்களின் உணர்வுகளை நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருப்பதகாவும், வெவ்வேறு மொழிப் படங்களாக இருந்தாலும் மக்களின் கதைகளைப் பேசியதால் அதை எல்லோராலுன் உணர்ந்துகொள்ள முடிந்ததாகவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அந்ததந்த மக்களின் மொழி, கலாச்சாரம் என அவர்களின் ஸ்டைலில் எடுக்கப்பட்டது அதன் வெற்றிக்கு காரணம் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


மண்ணின் கதைகள் - சர்வதேசத்தன்மை


கலைஞர்கள் மண் சார்ந்த கதைகளை உருவாக்கும்போது, அது சர்வதேசத்தன்மையை அடைவதாக வெற்றிமாறன்  தெரிவித்துள்ளார். முந்தைய காலத்தில் பெரும் கதைகளை சிறப்பாக சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் கதைகள் எடுக்கப்பட்டு வந்தன. சமீப காலமாக மண் சார்ந்த கதைகள் அவரவர் மொழியில் சொல்லப்படும்போது, கதை ரூட்டடாக இருக்கும்போது அது சர்வதேச அளவில் வெற்றிகரமாக கொண்டாடப்படுவதற்காக காரணம். இது மாற்றம் நிகழ்ந்து மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சினிமா துறை  வளர்ச்சி:


”ஆஸ்கர் வாங்குவதைவிட நம் மக்களுக்கான படங்களை சர்வதேச அரங்கங்களும் ஏற்றுக்கொள்வதையே முன்னேற்றமாக பார்க்கிறேன். தென்னிந்தியத் திரைப்படங்கள் இன்றைக்கு இந்தியாவில் கவனத்தைப் பெற்றுள்ளன. அதற்குக் காரணம் நமது மக்களின் கதைகளை சொல்வதே இந்த வீச்சுக்கு காரணம்” என்றார்.


ஒரு பிராந்திய மண்ணைச் சேர்ந்த படம் சர்வதேச அளவில் அடையாளப்படுகிறது. நம் கதைகளை, நம் மொழியில் கதையாக்கப்படும்போது, அதிலிருக்கும் உணர்வுகள் எல்லையை கடந்து எல்லோராலும் புரிந்துகொள்ளப்படுகிறது.  வெகுஜன சினிமா மூலமாக ஆஸ்கர் வாங்குவதுதான் தற்போது நிகழ்ந்திருக்கும் வளர்ச்சியாக கருதுகிறேன். வெகுஜன படங்கள் அங்கீகாரம் பெறுகின்றன.


”இந்திய திரைத் துறையின் சந்தையில் தென்னிந்திய திரைப்படங்கள் வணிகத்தில் முக்கிய பங்குவகிக்கிறது. இதற்கு காரணம் நாம் சொல்லும் கதைகள் நம் மண்ணைச் சார்ந்த கதைகளாக இருக்கின்றன. நாம் நம்முடைய அடையாளங்களுடன் தனித்துவத்துடன், பெருமையுடன் படங்களை இயக்குவது தான் இந்த வீச்சுக்கு காரணம் என நினைக்கிறேன்” என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.