தமிழ் சினிமாவில் ஒரே புகைச்சலாக உள்ள விஷயம் யார் சூப்பர் ஸ்டார் என்ற பேச்சுதான். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் என அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஒரு சில விஜய் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் தான் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுவர, அதற்கு ரஜினிகாந்த் ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், விஜய் நடிப்பில் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது. நவம்பர் மாதம் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68வது படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளார். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள அடியே படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குநர் வெங்கட் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் தளபதி 68 படம் குறித்த அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ”தளபதி 68 பட அப்டேட் குறித்து இப்பொழுது சொல்ல முடியாது. லியோ ரிலீஸுக்கு பிறகு அப்டேட் வரும். தற்போது முன்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இது அரசியல் படம் கிடையாது. இது ஒரு ஜாலியான எண்டர்டைன்மெண்ட் படம்” எனக் கூறினார்.
இதையடுத்து, உங்கள் பட டைட்டிலில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் என போடுவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, "நான் தளபதி என்று தான் போடுவேன், அவரது ரசிகர்களும் தளபதி என்பதை தான் விரும்புகின்றனர்" என்று கூறினார்.
லோகேஷ் விஜய் கூட்டணி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. கவுதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாஸ்டரில் லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைந்து மாஸ் காட்டியதால், லியோவிலும் அந்த ஹைப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சஞ்சய் தத் லியோவில் இணைந்துள்ளதால், அவரது பிறந்த நாளை ஒட்டி லியோவின் கிளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டது. ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் சஞ்சய் தத் கழுகுக்கு கீழ் இருந்து வாயில் சிகரெட்டுடன் இருக்கும் காட்சிகள் வெளியாகி இருந்தன. அதைப் பார்த்த ரசிகர்கள், லியோ அதிரடி ஆக்ஷனில் கலக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர்.
அடுத்தது அர்ஜுன் கதாபாத்திரம்
இந்த நிலையில் லியோவின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடிகர் அர்ஜுன் தன் பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறார். அதை ஒட்டி அன்றைய தினம் லியோ அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளது. விஜய், சஞ்சய் தத் வரிசையில் அர்ஜுன் பிறந்த நாளன்று, அவரது கேரக்டர் குறித்த க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.