வேட்டையன்
த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் , ரானா டகுபடி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
வேட்டையன் படத்தை ட்ரோல் செய்யும் விஜய் ரசிகர்கள்
வேட்டையன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நல்ல சமூக அக்கறையுள்ள ஒரு கதைக்களத்தை ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடையாத வகையில் ஒரு கமர்ஷியலான திரைப்படமாக இப்படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் விதமாக இப்படம் இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள் . அதே நேரத்தில் விமர்சகர்களும் இப்படத்திற்கு பாசிட்டிவான ரிவியூ கொடுத்திருக்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் வேட்டையன் திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் வேட்டையன் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள். படம் வெளியான நாள் முதல் சமூக வலைதளங்களில் படத்தைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் திட்டமிட்டு பரப்பப் படுகின்றன. பழைய படங்களின் விமர்சனங்கள் எடிட் செய்யப்பட்டு வேட்டையன் படத்தின் விமர்சனமாக வெளியிட்டு வருகிறார்கள். விஜய் ரசிகர்களின் இந்த செயல் அனைத்து தரப்பினரிடமும் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
வேட்டையன் படத்தை விஜய் எஞ்சாய் பண்ணி பார்த்தார்
ரசிகர்கள் இந்த மாதிரி சில்லரை மோதல்களில் ஈடுபட்டு வந்தாலும் நடிகர் விஜய் தனது நிலைப்பாட்டை மிக தெளிவாக ஏற்கனவே வெளிப்படுத்திவிட்டார். சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு தான் போட்டி போடவில்லை என்பதை அவர் லியோ படத்தின் ஆடியோ லாஞ்சில் வெளிப்படையாகவே பேசினார். சினிமாவை விட்டு அரசியலில் முழுமூச்சுடன் களமிறங்க இருக்கும் இந்த தருணத்தில் அவர் தனது சக நடிகர்கள் மற்றும் சக அரசியல் தலைவர்களுடன் நல்லுறவை தக்கவைத்துக் கொள்ளவே விரும்புகிறார்.
இந்த நேரத்தில் விஜய் ரசிகர்கள் தங்கள் சேட்டைகளை குறைத்துக்கொள்ளும் படி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தி கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தானும் விஜயும் சேர்ந்து வேட்டையன் திரைப்படத்தை பார்த்ததாகவும் விஜய் படத்தை ரொம்பவும் எஞ்சய் பண்ணி பார்த்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில் நாட்களாக போர் முழக்கமிட்டுக் கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் தற்போது வாயடைந்து நிற்கிறார்கள்.