கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அநீதி திரைப்படக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் வசந்தபாலன், ”அநீதி திரைப்படத்தில் முதல் முறையாக அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷை பார்த்த போது, பெரிய இசையமைப்பாளர் வருவார் என நினைத்தேன். அதேபோல அர்ஜூன் தாஸ் பெரிய நடிகராக வருவார். இந்த கதையை எழுதி முடித்தபோதே, இந்த ரோல் அர்ஜூன் தாஸ் செய்தால் சரியாக இருக்கும் என நினைத்தேன்.


அர்ஜூன் தாஸ் மிகப்பெரிய உயரங்களை அடைவார். காதல், சோகம், கண்ணீர் என பல இடங்களில் அழகாக அவர் நடித்துள்ளார். அவரது குரல் இந்த படத்தை தூக்கி நிறுத்தும்.


எளிய மனிதர்களின் நீதி மறுக்கப்பட்ட குரலை‌ அநீதி படம் பேசும். நான் எனது வழக்கமாக பாணியில் இருந்து மாறுபட்டு, திரில்லர் பாணியில் இப்படத்தை எடுத்துள்ளேன். ஜீ.வி. பிரகாஷின் நான்கு பிரம்மாண்டமான பாடல்கள் உள்ளது. துஷாரா ஹீரோயினாக பெரிய உயரத்தை அடைவார். இப்படம் சுவாரஸ்யமான, முக்கியமான படமாக இருக்கும். டெலிவரி பாய் கேரக்டரில் அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார். நம்முடன் வேலை பார்ப்பவர்களிடம் சாப்பிட்டாயா என கேட்பது முக்கியம். அந்த சின்ன அன்பை தான் மனிதர்கள் எதிர்பார்ப்பார்ப்பார்கள். அத்தகைய அன்பை பேசும் படமாக அநீதி இருக்கும்.




படத்தில் குரல் தரும் பலம் என்பது எப்போதும் இருக்கும். சாதாரண வசனங்கள் கூட குரலால் பலமான வசமாக மாறிவிடும். அர்ஜூன் தாஸ் குரலில் லைஃப் டைம் செட்டில்மென்ட் என வசனத்தை கேட்ட போது அதிர்வை ஏற்படுத்தியது. ஒரு குரல் மக்களை தன்னிச்சையாக எழுச்சி கொள்ள வைக்கும். அத்தகைய குரல் அரிதாக சிலருக்கு அமையும். அது அர்ஜீன் தாஸ்க்கு அமைந்துள்ளது. பட்டாசு பாலுவாக இருந்த பசுபதியை கண்ணீர் விடும் தோல்வியடைந்த முருகேசனாக வெயில் படத்தில் நிறுத்தினேன். அதற்கு இணையான நடிப்பை அர்ஜூன் தாஸ் இப்படத்தில் தந்துள்ளார். சக மனிதனை மனிதனாக நடத்த வேண்டுமென்ற குரலை இப்படம் பேசும். அங்காடி தெரு படம் வேறு. அநீதி படம் வேறு. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. இது திரில்லரான வாழ்வியல் பதிவு. ஒடிடியில் வெளியிடப்படும் திரைப்படங்களில் வருமானத்தில் ஒரு பங்கை திரையரங்குகளுக்கு வழங்க வேண்டுமென கூறியது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் பதில் சொல்வார்கள்” எனத் தெரிவித்தார்.




இதனைத்தொடர்ந்து பேசிய அர்ஜூன் தாஸ், “ரொம்ப பேருக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமையுமா எனத் தெரியவில்லை. இப்படத்தில் பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் நிறைய கற்றுக் கொண்டேன். வசந்தபாலன் அழைத்த போது, வில்லன் ரோல் தான் தருவார் என நினைத்தேன். ஆனால் லீட் ரோல் பண்ண வேண்டுமென சொன்னதும், உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். அவருடன் வேலை செய்ய வேண்டுமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. நான் எப்போதும் இயக்குநர்களிடம் சரணடைந்து விடுவேன். அவர்கள் சொல்லும்படி நான் நடிப்பேன். எனக்கு நீண்ட கால திட்டங்கள் இல்லை. லியோ திரைப்படத்தில் நான் இருக்கிறேனா, இல்லையா என பலரும் கேட்கிறார்கள். அது சர்ப்ரைசாக இருக்கட்டும். படம் வரும்போது தெரிந்து கொள்ளுங்கள். எனது குரலால் எனக்கு நடிக்க வாய்ப்பு  கிடைக்கவில்லை. விஜய், அஜித், சூர்யா போன்றவர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” எனத் தெரிவித்தார்.




இதையடுத்து பேசிய நடிகை துஷாரா விஜயன், ”அநீதி எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். நான் இதுவரை நடிக்காத வேறுபட்ட கேரக்டரில், இன்னொசென்ட்டாக நடித்துள்ளேன். எனக்கும், அர்ஜூன் தாஸ்க்கும் நடிப்பதில் உள்ள போட்டி நன்றாக இருக்கும். வசந்தபாலன்  படத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம்” எனத் தெரிவித்தார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இயக்குநர் வசந்தபாலன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.