முகேன் ராவ் நடித்துள்ள ஜின் - தி பெட்
'பிக் பாஸ் சீசன் 3' வெற்றியாளரும், 'வேலன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜின்' பெட்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, 'நிழல்கள்' ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார்.
இயக்குநரை அலையவிட்ட பிரபல நடிகர்
இப்படத்தின் கதையை உருவாக்கிய பிறகு மிகப்பெரிய முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் இந்த கதையை சொன்னேன். அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களுடைய பரிந்துரையின் பெயரில் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரை சந்தித்து அவரிடமும் கதையை விவரித்தேன். கதையை கேட்டு சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். தான் பார்த்த ஐந்து சிறந்த இயக்குநர்களில் நானும் ஒருவர் என்று சொன்னார். ஆனால் இந்த கதையில் தனக்கு சில மாற்றங்கள் இருப்பதாகவும் அதை இருவரும் சேர்ந்து எழுதலாம் என்று சொன்னார்.
உனக்கு சினிமா தெரியல
நாங்கள் இருவரும் சேர்ந்து இரண்டு வருட காலம் ஐந்து முறை சேர்ந்து இந்த கதையில் நிறைய மாற்றங்கள் செய்தோம். ஒவ்வொரு முறை அவர் கதையில் மாற்றங்கள் செய்தபோதும் நான் சமரசம் செய்துகொண்டேன். இதற்கிடையில் அந்த நடிகரின் பெரிய படம் ஒன்று வெளியானது. அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நம் படத்தை தொடங்கிவிடலாம் என நான் தயாரிப்பாளரை அழைத்துக் கொண்டு அவரைப் பார்க்க ஹோட்டலுக்கு சென்றேன். ஆனால் இந்த முறை அந்த நடிகரின் உடல்மொழி தொடங்கி பேச்சுவார்த்தை எல்லாமே மாறியிருந்தது. என்னிடம் மீண்டும் கதை சொல்ல சொன்னார். சில காட்சிகளை நடித்து காட்ட சொன்னார். நடித்து காட்டினே. கடைசியில் உனக்கு சினிமா தெரியல. நீ அன்ஃபிட் என்று சொல்லிவிட்டார். தயாரிப்பாளரும் கைவிட்டு என் அறைக்கு அழுதுகொண்டே வீடு போய் சேர்ந்தேன். அன்று முடிவு செய்தேன் இந்த படத்தை நானே தயாரித்து இயக்க வேண்டும் எனறு" என டி.ஆர் பாலா தெரிவித்தார்.
டி.ஆர் பாலா குறிப்பிட்ட அந்த பிரபல நடிகர் யார் என்கிற விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் தொடங்கியுள்ளது.