திரைத்துறையில் சமீப காலமாக அடிக்கடி பிரபலங்களின் மரணங்கள் செய்தி திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


இயக்குநர் சூரிய கிரண் மரணம் (Director Surya Kiran Death):


மௌன கீதங்கள், படிக்காதவன்,மை டியர் குட்டி சாத்தான், முந்தானை முடிச்சு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஈர்த்தவர் மாஸ்டர் சுரேஷ் (Master Suresh). தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பாக்யராஜ் உடன் மாஸ்டர் சுரேஷ் இணைந்து  நடித்த மௌன கீதங்கள் படத்தில் இடம் பெற்ற 'டாடி டாடி ஓ மை டாடி...' பாடல் மிகவும் பிரபலமானது. பின்னர் சூரிய கிரண் என்ற பெயரில் இயக்குநராக அறிமுகமாகி சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற தெலுங்கு படங்களை இயக்கி உள்ளார்.


 


 


வரலட்சுமி பட இயக்குனர்:


தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் 'அரசி' என்ற தமிழ் படத்தை இயக்கி வந்தார் இயக்குனர் சூரிய கிரண். விரைவில் இப்படம் திரையரங்கில் வெளியாக இருந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று காலை காலமானார் இயக்குநர் சூரிய கிரண். இவற்றின் மறைவு செய்தி திரையுலகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


குழந்தை நட்சத்திரமாக இரண்டு முறை மத்திய அரசின் விருதையும், இயக்குநராக இரண்டு நந்தி விருதையும் பெற்றுள்ளார் சூரிய கிரண். விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சுஜிதா தனுஷின் சகோதரர் தான் சூரிய கிரண் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சுஜிதா தனுஷும் ஏராளமான தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 


 



கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் அதிகமானதன் காரணமாக இன்று காலை வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் காலை 11 மணியளவில் அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 48. சென்னை கேகே நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அவரின் உடல் மக்களின் வைக்கப்பட்டுள்ளது.அவரின் இறுதி சடங்குகள் நாளை நடைபெற்று   நல்லடக்கம் செய் யப்பட உள்ளது. 


 



தனிப்பட்ட வாழ்க்கை : 


இயக்குநர் சூரிய கிரண், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட 7வது நாளில் வெளியேற்றப்பட்டார். கண்ணுக்குள் நிலவு, புன்னகை பூவே, சமுத்திரம், காசி  உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கல்யாணி. இவருக்கும் இயக்குநர் சூரிய கிரணுக்கும் 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்றனர். அவர்களின் விவகாரத்து குறித்த அதிகாரப்பூர்வமான செய்தியை பிக் பாஸ் நிகழ்ச்சியில்  இருந்து வெளியேறிய பிறகு உறுதிப்படுத்தி இருந்தார் இயக்குநர் சூரிய கிரண். இருப்பினும் தனது மனைவியுடன் சேர்ந்து வாழவே விருப்பம் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.