வடிவேலுவின் மிகப்பெரிய காமெடி காட்சிகள் அமைந்த அரசு படத்தில் அவர் மிகப்பெரிய ஆர்வமே இல்லாமல் தான் நடித்தார் என அப்படத்தின் இயக்குநர் சுரேஷ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு சுரேஷ் இயக்கத்தில் சரத்குமார், ரோஜா, சிம்ரன், வடிவேலு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் அரசு. ஆக்ஷன் கதையில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது நடைபெற்ற மறக்க முடியாத சம்பவம் பற்றி இயக்குநர் சுரேஷ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைப் பற்றிக் காணலாம்.
அரசு படம் உருவாக காரணம்
நான் தாயுமானவன் என்ற பெயரில் ஒரு கதையை தயார் செய்து நிறைய தயாரிப்பாளர்களை சந்தித்து பேசினேன். எல்லாரும் கதை நல்லாருக்கு என சொன்னார்களே தவிர படம் தயாராக கால தாமதம் ஆனது. காரணம் நான் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர்கள் எல்லோரும் ஆக்ஷன் கதைகளை எடுப்பதில் சிறந்தவர்களாக இருந்தனர். அதனால் ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் ஆக்ஷன் கதை தயார் பண்ண சொன்னார். அப்படி உருவானது தான் அரசு தர்பார்.
சூப்பர்குட் பிலிம்ஸில் இருந்து என்னை முதன்முதலில் இருந்து சரத்குமாரிடம் தான் அழைத்து சென்றார்கள். அவர் என்னிடம் சூரியன் மாதிரி படம் இருந்தால் சொல்லுங்கள். கேட்டுப் பாருங்க என கூற மறுநாள் கதை கேட்டார். கதை கேட்டதும் அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. சரத்குமாரின் பிறந்தநாளில் பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்கலாம் என கூறி விட்டார்.
அதேபோல் முதலில் ஹீரோயினாக சினேகாவிடம் கேட்டோம். அவர் தேதியில்லை என மறுத்து விட்டார். அடுத்ததாக சிம்ரனிடம் கேட்டோம். அவரும் கதை கேட்க தொடங்கிய 2 நிமிடங்களிலேயே போதும் என நிறுத்தி விட்டு சூப்பர் குட் பிலிம்ஸூக்கு போன் செய்து ஓகே சொல்ல எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ஆர்வம் இல்லாமல் நடித்த வடிவேலு
அரசு படத்தின் காமெடி இன்றளவும் பேசப்படுகிறது. ஏற்கனவே கவுண்டமணி - செந்திலுக்கு காமெடி காட்சிகள் எழுதிய அனுபவம் இருந்தது. இந்த படத்துக்கு முதலில் விவேக்கிடம் தான் கதை சொன்னேன். முதல் பாதி கேட்டதும் சூப்பர் என சொன்னார். 2ம் பாதி சொன்னதும் அதில் 2 காட்சிகள் தான் வருவீர்கள் என்றதும் முடியாது என சொல்லி விட்டார். அதன்பிறகு தான் உள்ளே வடிவேலு வந்தார்.
அப்போது அவருக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லாமல் இருந்தது. வடிவேலு என்னிடம் கதையே கேட்கவில்லை. கும்பகோணத்தில் ஷூட்டிங்கிற்கு வந்தார். டயலாக் பேப்பரை காட்டி படித்து பார்த்ததும் அவர் முகம் சுருங்கி விட்டது. இதில் எனக்கு காமெடியே வரவில்லை. நீங்க வேறு வசனம் எழுதிட்டு வாங்க என கூறினர். படத்தில் நடிக்கும்போது கூட விருப்பம் இல்லாமல் தான் நடித்தார்.ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.
இருந்தாலும் பிச்சுமணி என்ற அந்த கேரக்டருக்கு வடிவேலு முழு மூச்சாக நடித்தார். அந்த படத்தில் தனக்கு அரசு வேலை கிடைத்தவுடன் டெல்லி கணேஷிடம் சொல்லி விட்டு பைக்கில் பின்னால் அமர்ந்து செல்லும்படி ஒரு காட்சி இருக்கும். அப்படி ஏறி அமர்ந்தவர் நேராக செட்டை விட்டு வெளியே சென்று காரில் ஏறி ரூமுக்கு சென்று பின்னர் சென்னை திரும்பி விட்டார். எல்லாம் எடிட் செய்து டப்பிங் பண்ண வந்தவர் எல்லா காட்சியையும் பார்த்து விட்டு என்னை பாராட்டினார்.